2017-09-29 14:40:00

மக்கள் தங்கள் வாழ்வில் மகிழ்வையும் உறுதியையும் பெற உதவுதல்


செப்.29,2017. இரக்கத்தின் யூபிலி ஆண்டில், ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாக நாம் பெற்ற நன்மைத்தனத்தின் அடையாளமும், இறைப்பராமரிப்பும், மன்னிப்பும் தொடர திருஅவையின் பணித் தேவைப்படுகின்றது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புதிய நற்செய்தி அறிவிப்பு திருப்பீட அவையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அவ்வவையின் பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'தான் பழித்துரைத்து துன்புறுத்திய இயேசு, தன் மீது இரக்கம் கொண்டு தன்னைத் தேர்ந்துகொண்டது குறித்து தூய பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில் கூறும் வார்த்தைகளை மேற்கோள்காட்டி, நற்செய்தி அறிவிப்பவரின் அர்ப்பணத்தில் இரக்கம் என்பது பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

பல்வேறு நல்ல கலாச்சாரங்களிலிருந்தும், தனி மனிதர்களிலிருந்தும் திருஅவைக்கு கிட்டும் வளங்கள், நன்மைத்தனங்கள் அனைத்தும் கருணையின் நடவடிக்கைகளை உயிரூட்டமுள்ளவைகளாக மாற்றுவதுடன், நற்செய்தியை ஏற்றுக்கொள்ளவும் உதவுவது மட்டுமல்ல, உலக அமைதிக்கான முன்னோடியாகவும், கலந்துரையாடல்களின் இடமாக திருஅவையை மாற்றுவதாகவும் உள்ளன என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மக்களின் மனங்களில் ஊடுருவி, அவர்கள் இறைவனின் வழிகளையும், அன்பையும் கண்டுகொள்ள உதவுவதுடன், அதன் வழியாக, வாழ்வில் உறுதியையும் நம்பிக்கையையும் பெற உதவுவோம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வை மகிழ்ச்சியில் அனுபவிக்க முடியாமலும், வருங்காலம் குறித்த அச்சத்திலும் வாழும் மக்களுக்கு, இறைவனின் மகிழ்ச்சியைக் கொணரும் நற்செய்தி அறிவிப்பாளர்களின் கடமை குறித்தும் எடுத்துரைத்தார்.

உண்மையான, ஒன்றிணைந்த, மனிதகுல வளர்ச்சிக்கு உதவக்கூடிய சமூக மதிப்பீடுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக, புதிய நற்செய்தி அறிவிப்புப் பணித் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.