2017-09-30 15:54:00

அ.பணி.டாம் விடுதலைக்கு நன்றிகூரும் நாள் அக்டோபர் 2


செப்.30,2017. ஏமனில் இஸ்லாம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்த இந்திய சலேசிய சபை அருள்பணியாளர் டாம் உழுன்னலில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, அக்டோபர் இரண்டாம் தேதி, நன்றிகூரும் நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று, அரேபியாவின் திருப்பீட பிரதிநிதி ஆயர் பால் ஹின்டர் அவர்கள் அறிவித்தார்.

அ.பணி.டாம் அவர்களின் விடுதலைக்காக, திருப்பலிகளிலும், செபங்களிலும் கலந்துகொண்டு செபித்த விசுவாசிகள், அவர் விடுதலையடைந்திருப்பதற்கு  நன்றிகூரவும் ஒருநாளை அர்ப்பணிக்க வேண்டும் என்று, ஆயர் ஹின்டர் அவர்கள் தெரிவித்தார்.

அ.பணி.டாம் அவர்கள், எதிர்பாராதநேரத்தில் செப்டம்பர் 12ம் தேதி விடுதலை செய்யப்பட்டார் எனவும், அதற்கு நன்றிகூரும் நாளாக, காவல்தூதர்கள் விழாவான அக்டோபர் 2ம் தேதியை குறித்திருப்பதாகவும், ஆயர் ஹின்டர் அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறினார்.

அ.பணி.டாம் அவர்கள், 18 மாதங்களுக்கு மேலாக பிணையல் கைதியாக வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, அரசு-சாரா நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நன்றிகூறுவதோடு நிறுத்திவிடாமல், அ.பணி.டாம் அவர்களைப் பாதுகாத்துவந்த கடவுளுக்கு நன்றிகூரக் கடமைப்பட்டுள்ளோம் என்றும் கூறினார், ஆயர் ஹின்டர்.

வருகிற திங்களன்று, எல்லாப் பங்கு ஆலயங்களிலும், செபம், திருநற்கருணை ஆராதனை மற்றும் நன்றி வழிபாடுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார், அரேபியாவின் திருப்பீட பிரதிநிதி ஆயர் பால் ஹின்டர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.