2017-09-30 15:47:00

கிறிஸ்தவர், யூதர், முஸ்லிம்கள், அமைதிக்காக செபிக்க வேண்டும்


செப்.30,2017.  “இந்த நம் காலத்தில், கிறிஸ்தவர்களும், யூதர்களும், முஸ்லிம்களும், அமைதிக்காக மிக அதிகமாகச் செபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், அக்டோபர் 01, இஞ்ஞாயிறன்று, வட இத்தாலியிலுள்ள Cesena, பொலோஞ்ஞா ஆகிய இரு நகரங்களுக்கு, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஆறாம் பத்திநாதர் (பயஸ்)  அவர்கள் பிறந்ததன் 300ம் ஆண்டு நிறைவையொட்டி, Cesenaவுக்கு இஞ்ஞாயிறு காலையில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொலோஞ்ஞா உயர்மறைமாவட்டத்தில் இடம்பெறும், திருநற்கருணை மாநாட்டிலும் கலந்துகொள்வார்.

Cesena-Sarsina ஆயர் Regattieri Douglas, பொலோஞ்ஞா பேராயர் Matteo Maria Zuppi ஆகிய இருவரின் அழைப்பின்பேரில், அந்நகரங்களுக்குச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு மாலை 5 மணிக்கு பொலோஞ்ஞாவில் திருப்பலி நிறைவேற்றிய பின், வத்திக்கானுக்குப் புறப்படுவார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.  

பொலோஞ்ஞாவில் ஏழைகளுடன் மதிய உணவருந்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை ஆறாம் பத்திநாதர் அவர்கள், Cesena நகரில், 1717ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி பிறந்தார். இவர், 1775ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி முதல், 1799ம் ஆண்டு அவரின் மரணம்வரை, அதாவது அவ்வாண்டு ஆகஸ்ட் 29ம் தேதி வரை திருஅவையின் தலைவராகப் பணியாற்றினார். தனது 81வது வயதில் மரணமடைந்த திருத்தந்தை ஆறாம் பத்திநாதர் அவர்கள், திருஅவையை நீண்டகாலம் தலைமையேற்று வழிநடத்திய நான்காவது திருத்தந்தை ஆவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.