2017-09-30 16:45:00

பாசமுள்ள பார்வையில்: இயேசு அடியானில் தெரிந்த இறைச்சாயல்


புகழ்பெற்ற பேச்சாளர், பாரதி பாஸ்கர் அவர்கள், ஒருமுறை, மேடையில் பகிர்ந்துகொண்ட உண்மை நிகழ்வு இது:

குமரி முனையில் வாழ்ந்துவந்த ஓர் இளையவரின் பெயர், இயேசு அடியான். அவ்விளைஞர் நீச்சலில் அதிகத் திறமை பெற்றவர். எனவே, பாறைகள் நிறைந்த கடல் பகுதிகளில் நீந்தி, பலரது உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். சில வேளைகளில், பாறைகளுக்கிடையே சிக்கி இறந்தோரின் உடலை மீட்டுக் கொணர்ந்துள்ளார்.

ஒருமுறை, ஆக்ராவிலிருந்து, செல்வம் மிகுந்த ஒரு குடும்பத்தினர், குமரி முனை வந்தபோது, அவர்களின் இளைய மகன் பாறைகளுக்கிடையே சிக்கினார். இயேசு அடியான் அவர்கள், அந்த இளையவரை உயிரோடு மீட்டுக் கொணர்ந்தார். தன் மகனின் உயிரைக் காத்த இயேசு அடியான் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் தருவதாக தந்தை கூறியபோது, அவர் மறுமொழியாக, "எனக்கு எதுவும் தேவையில்லை. உயிர்களைக் காப்பது என் கடமை" என்று பணிவாக மறுத்துவிட்டார்.

சில மாதங்கள் சென்று, அத்தந்தை மீண்டும் குமரிமுனைக்குச் சென்று, இயேசு அடியான் அவர்களை தன்னுடன் ஆக்ராவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு, அச்செல்வந்தரின் வீட்டு பூசையறையில், இயேசு அடியானின் படம், ஏனைய தெய்வங்களின் படங்களுடன் வைக்கப்பட்டிருப்பதைக் காட்டினார். பின்னர் அத்தந்தை, இயேசு அடியானிடம், "நீங்கள் என் மகனை உயிருடன் மீட்டதற்காக மட்டும் இங்கு உங்கள் படத்தை நான் வைக்கவில்லை. ஆனால், எதையும் எதிர்பார்க்காமல், உயிர்களைக் காத்துவரும் உங்களிடம், கடவுளையேப் பார்ப்பதுபோல் நாங்கள் உணர்கிறோம். அதனால்தான், உங்கள் படம் எங்கள் பூஜையறையில் உள்ளது" என்று கூறினார்.

பலன்கள் ஏதும் எதிர்பார்க்காமல், உயிர்களைக் காக்கும் உன்னத மனிதர்கள் வழியே, இறைவன் இவ்வுலகில் தொடர்ந்து வாழ்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.