சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

இயேசுவைப் பின்பற்றுவதற்கு ஆண்டவரிடம் துணிச்சலைக் கேட்போம்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருத்தந்தை திருப்பலி

03/10/2017 15:11

அக்.03,2017. நம் வாழ்வில் இயேசுவைப் பின்பற்றுவதற்கு, துணிவையும், சக்தியையும் ஆண்டவரிடம் கேட்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலை திருப்பலியில் விசுவாசிகளிடம் கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலியில், இயேசுவின் எருசலேம் நோக்கிய பயணம் பற்றிய நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

தாம் சிலுவையில் அறையப்படும் தருணம் அண்மித்துவருவதை அறிந்தவராய், தம் தந்தையின் விருப்பத்தை ஏற்று, இயேசு எருசலேம் செல்வதற்கு உறுதிபூண்டார் என்றும், அவர் தம் நோக்கத்தை சீடர்களுக்கு அறிவித்தார் என்றும், திருத்தந்தை கூறினார்.

இயேசு எருசலேமுக்குச் செல்கையில் அவரின் சீடர்கள் அவரைப் பின்தொடரவில்லை எனவும், இயேசுவின் மறையுண்மையை எவரும் புரிந்துகொள்ளாததால், அவர் தம் தீர்மானத்தில் தனிமையாய் இருந்தார் எனவும், திருத்தந்தை கூறினார்.

மனஉறுதிக்கும், கீழ்ப்படிதலுக்கும் இயேசு எடுத்துக்காட்டாய் இருக்கிறார் என்றும், இயேசு, கெத்சமெனி தோட்டத்தில் தம் தந்தையிடம் இறைஞ்சியதைத் தவிர, எல்லா நேரங்களிலும் தந்தையின் விருப்பத்திற்குத் தம்மைக் கையளித்தார் என்றும் கூறியத் திருத்தந்தை, இயேசு போன்று, நாமும் வாழ வேண்டுமென, இறைத்தந்தை, எல்லையில்லாப் பொறுமையுடன் காத்திருக்கிறார் என்றும் மறையுரையில் கூறினார்.

சிலுவையை நோக்கி தனியாக நடந்த இயேசுவை, நம்மை மிகவும் அன்புகூர்ந்துள்ள இயேசுவை, நேரம் எடுத்து நினைத்துப் பார்த்து, அவரின் கீழ்ப்படிதலுக்கும், மனஉறுதிக்கும் நன்றி சொல்வோம், அவரோடு உரையாடுவோம், இயேசுவைப் பின்செல்ல அருளை இறைஞ்சுவோம் என்று, மறையுரையில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், செபத்தின் அமைதியில் மட்டுமே, கடவுளின் குரலைக் கேட்க முடியும் என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

03/10/2017 15:11