2017-10-03 16:29:00

மக்களின் இறந்த உடல்களின்மீது நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது


அக்.03,2017. பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களின் இறந்த உடல்களின்மீது, அந்நாட்டைக் கட்டியெழுப்பவோ, துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் மூலம் தீமைக்கு எதிராகப் போராடவோ இயலாது என்று, பிலிப்பீன்ஸ் நாட்டில் பணியாற்றும் இயேசு சபை அருள்பணியாளர்கள் கூறியுள்ளனர்.

‘அப்பாவி மக்களின் உயிர்களைக் கொல்லும், சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்கள் மற்றும், விற்பன செய்பவர்களின் மனசாட்சிக்கு’ என்று, அழைப்பு விடுத்துள்ள மனிலா கர்தினால் அந்தோனியோ லூயிஸ் தாக்லே அவர்களுக்கு ஆதரவாக, பிலிப்பீன்ஸ் இயேசு சபை அருள்பணியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் இயேசு சபை மாநில அதிபர் அருள்பணி அந்தோனியோ மொரேனோ அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், சட்டத்துக்குப் புறம்பே நடைபெறும் போதைப்பொருள் அச்சுறுத்தல், உண்மையானது மற்றும் அழிவை ஏற்படுத்தவல்லது எனக் கூறப்பட்டுள்ளது.

மனித வாழ்வை கண்மூடித்தனமாக அழிக்கும் அனைத்து குற்றச் செயல்கள் நிறுத்தப்படுமாறு இயேசு சபையினர் விண்ணப்பிப்பதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஓராண்டுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட, பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்களின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், குறைந்தது பதினான்காயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொலைகளில் 3,800, காவல்துறையால் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இவற்றில் ஆயிரக்கணக்கான கொலைகள் சட்டத்துக்குப் புறம்பே இடம்பெற்றுள்ளன. குற்றவாளிகள் தண்டனை பெறாமலே உள்ளனர் என, பீதேஸ் செய்தி கூறுகின்றது. 

ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.