சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறைக்கல்வி, மூவேளை உரை

மறைக்கல்வியுரை : நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள் நாம்

புதன் மறைக்கல்வியுரையின்போது - ANSA

04/10/2017 16:44

அக்.,04,2017. எம்மாவு சென்ற வழியில் இயேசுவை சந்தித்து, பின்னர் எருசலேம் திரும்பிய இரு சீடர்கள், ஏனைய சீடர்களிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, இயேசு அவர்கள் நடுவே தோன்றி பேசியது குறித்து, லூக்கா நற்செய்தியின் 24ம் பிரிவில் கூறப்பட்டவைகள் முதலில் வாசிக்கப்பட, 'நம்பிக்கையின் மறைப்பணியாளர்கள்' என்ற தலைப்பில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் தூய பேதுரு பேராலய வளாகத்தில் சுற்றுலாப் பயணிகளும், திருப்பயணிகளும், வழக்கத்தைவிட அதிக அளவில் கூடியிருக்க, கடந்த பல வாரங்களாக, தொடர்ந்து வழங்கிவரும் 'கிறிஸ்தவ நம்பிக்கை' என்ற தலைப்பின்கீழ் 'நம்பிக்கையின் மறைப்பணியாளர்' என்பது குறித்து மறைக்கல்வியை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ எதிர்நோக்கு, அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை குறித்த நம் மறைக்கல்வித் தொடரில், இன்று, நம்பிக்கையின் மறைப்பணியாளராக நாம் அழைக்கப்பட்டுள்ளது குறித்து, உங்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருஅவையின் மறைப்பணிகளில் நம் பங்கேற்பு குறித்து சிந்திப்பதற்கு பாரம்பரியமாக அக்டோபர் மாதம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இன்று நாம் யாருடைய திருவிழாவைச் சிறப்பிக்கின்றோமோ, அந்த புனித பிரான்சிஸ் அவர்கள், இவ்விடயத்தில் நமக்கு நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்க முடியும். சாவின் மீது இயேசு கண்ட வெற்றியிலிருந்தும், இயேசுவின் உயிர்ப்பு வாழ்விலிருந்து நாம் பெற்ற பங்கிலிருந்தும் பிறந்த மகிழ்ச்சி நிறைந்த நம்பிக்கையின் உண்மை மறைபோதகர்களாகத் திகழ்ந்தார் புனித பிரான்சிஸ். நம் இதயங்களிலும் இவ்வுலகிலும் செயலாற்றும் தூய ஆவியாரின் மாற்றம் கொணரும் வல்லமையில், முழு நம்பிக்கைக் கொண்டவர்களாக, நம்பிக்கையின் சாட்சிகளாக நாம் விளங்கவேண்டும் என இயேசு அழைப்பு விடுக்கிறார். மகிழ்ச்சி என்பது உண்மையான கிறிஸ்தவர்களின் உறுதியான அடையாளம். ஏனெனில், தீமை வெற்றியடையாது. சிலுவையில் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவின் அன்பே, இறுதியில் வெற்றி பெறும் என்பது நாம் அறிந்ததே. நம்பிக்கை எனும் கொடை, சிலவேளைகளில் நம்மிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பதுபோல் தோன்றலாம். ஆம், நம் காலத்தில், நம்மையொத்த கிறிஸ்தவர்கள், பலர், சித்ரவதைகளை அனுபவிப்பதையும், ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்துவுக்காக மறைசாட்சிகளாக உயிரிழப்பதையும் காண்கிறோம். அவர்களின் இந்த சாட்சியம், நாம் கிறிஸ்துவின் வாக்குறுதிகளில் நம்பிக்கைக் கொண்டவர்களாகத் தொடர்ந்து செயலாற்ற, நமக்குத் தூண்டுதலாக உள்ளது. நம்பிக்கையின் மறைப்பணியாளர்களாக, கடவுளின் மீட்பு வல்லமையில் நாம் மகிழ்ச்சி கொள்வோம். மனதைத் தளரவிடாதவர்களாக, அதேவேளை, வருங்காலத்தை முழு நம்பிக்கையுடன் நோக்க, மற்றவர்களுக்கு நாம் உதவுவோம்.

இவ்வாறு, இவ்வார புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

 ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

04/10/2017 16:44