2017-10-04 17:05:00

கடல் தொழிலாளர்கள் மீது திருப்பீடத்தின் அக்கறை


அக்.04,2017. கடலில் வாழ்பவர்கள் மற்றும் வேலைசெய்பவர்கள் மீது, திருஅவை எப்போதும் சிறப்புக் கவனம் செலுத்துகின்றது என்று, பேரருள்திரு Fernando Chica Arellano அவர்கள், ஐ.நா. கூட்டமொன்றில், இச்செவ்வாயன்று உரையாற்றினார்.

FAO எனப்படும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் திருப்பீடப் பிரதிநிதியாகிய பேரருள்திரு Arellano அவர்கள், இஸ்பெயின் நாட்டின் Vigo வில், Conxemar மற்றும் FAO நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டு கருத்தரங்கில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்புத் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட, எந்த ஒரு தொழிலாளரும் ஒதுக்கப்படாமல், நீதி, சுதந்திரம், மாண்பு, பொருளாதாரப் பாதுகாப்பு, சமவாய்ப்புகள் ஆகிய, அனைத்துத் தொழிலாளருக்கும் வழங்கப்படுமாறு கேட்டுக்கொண்டார், பேரருள்திரு Arellano. இதற்கு அரசியலில் ஆர்வமும், சமுதாயத்தின் ஆதரவும் அவசியம் எனவும், அவர் கூறினார்.

அக்டோபர் 3, இச்செவ்வாய் முதல், அக்டோபர் 05, இவ்வியாழன் வரை நடைபெறும் இக்கருத்தரங்கு, காலநிலை மாற்றமும், மீன்பிடித்தொழிலும் என்ற தலைப்பில் இடம்பெற்று வருகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.