2017-10-04 16:51:00

சிறாரின் மாண்பு மீறல் நிறுத்தப்பட கர்தினால் பரோலின் அழைப்பு


அக்.04,2017. ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’என்ற தலைப்பில், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இச்செவ்வாயன்று தொடங்கியுள்ள உலக மாநாட்டில், முக்கிய உரையாற்றிய, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், சிறாரின் மாண்பு மீறல் நிறுத்தப்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார். 

சிறாரின் மாண்புக்கு எதிராக பெருமளவில் குற்றங்கள் இடம்பெறுவதற்கு அதிகமான சான்றுகளைக் காண முடிகின்றது என்று உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், இந்த உலகில் இடம்பெறும் பல பிரச்சனைகள் போன்று, டிஜிட்டல் உலகிலும் குற்றங்கள் பரவி வருவதைக் காண்கிறோம் என்று கூறினார்.

டிஜிட்டல் உலகம், ஏனைய எதார்த்தங்களிலிருந்து பிரிக்கப்படவில்லை, இது உலகின் தனித்துவமிக்க எதார்த்தத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது எனவும், பழைய ஆபத்துக்கள் புதிய வழிகளில் வெளிப்படுத்தப்படும் ஆபத்துக்களை சிறார் எதிர்நோக்குகின்றனர் எனவும் உரையாற்றினார், கர்தினால் பரோலின்.

நாம் யாருடைய மாண்பைப் பாதுகாத்து, ஊக்கப்படுத்த விரும்பி பேசிவருகிறோமோ அவர்களும் மனிதர்கள் எனவும், அவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள் எனவும் கூறினார், கர்தினால் பரோலின்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் இவ்வுலக மாநாடு, அக்டோபர் 06, வருகிற வெள்ளியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.