2017-10-04 16:16:00

தொழிலாளர், வேலைவாய்ப்பற்றவர்களுக்காக திருத்தந்தை செபம்


அக்.04,2017. தொழிலாளரின் மாண்பையும், உரிமைகளையும் நாம் எப்போதும் நினைவில் இருத்த வேண்டும் என்றும், அவர்களின் மாண்பும், உரிமைகளும் மீறப்படும் சூழல்களுக்கு எதிராய்க் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார். 

அக்டோபர் மாதச் செபக்கருத்து பற்றி காணொளிச் செய்தியில் விளக்குகையில் இவ்வாறு கூறியத் திருத்தந்தை, தொழிலாளரின் உண்மையான முன்னேற்றத்திற்கு, மனிதரும், சமூகமும் உதவ வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தையின் அக்டோபர் மாதச் செபக்கருத்து, தொழிலாளர், மற்றும் வேலைவாய்ப்பற்றவர்களுக்காகச் செபிக்குமாறு விண்ணப்பிக்கின்றது.

மேலும், தாய்வானின் Kaohsiung நகரில் நடைபெற்றுவரும், கடல் தொழிலாளருக்கு மேய்ப்புப்பணி குறித்த 24வது உலக மாநாட்டிற்குச் செய்தி அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 01, இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள இம்மாநாட்டிற்கு, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், கடலில் பணியாற்றும் அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்கு, இம்மாநாடு உதவும் என்ற, திருத்தந்தையின் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.   

“வலைகளில் சிக்கியுள்ள” என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இம்மாநாடு, அக்டோபர் 07, வருகிற சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.