2017-10-06 16:07:00

இணையதளம் சிறார் வளர்வதற்கு உதவியாக இருப்பதாக


அக்.06,2017. “இணையதளம், சிறாருக்கு பாதுகாப்பான மற்றும் வளமையான மனித இடமாக அமைவதற்கு நாம் எல்லாரும் உறுதி எடுப்போம், இணையதளம், சிறாரை அமுக்கிவிடாமல், அவர்கள் வளர்வதற்கு உதவியாக இருப்பதாக” என்ற சொற்கள், இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாயின.

மேலும், ‘டிஜிட்டல் உலகில் சிறார் மாண்பு’ என்ற உலக மாநாட்டில் கலந்துகொண்ட, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதள பாதுகாப்பு அலுவலகத் தலைவர் Jacqueline Beauchere அவர்கள், இம்மாநாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், இணையதளத்தில் சிறார் பயன்படுத்தப்படுவதிலிருந்தும், சிறாரைப் பாலியல் தொல்லைகளிலிருந்தும் காப்பாற்றுவதற்கு, கத்தோலிக்க திருஅவை தீவிரமாய்ச் செயல்படுகின்றது என்று கூறினார்.

இணையதளத்தில் சிறாரைப் பாதுகாப்பது குறித்து இம்மாநாட்டில் உரையாற்றிய, Beauchere அவர்கள், உரிமைகள் மீறப்படும் சிறாரைப் பாதுகாப்பதற்கு, உலக அளவில் எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளில் கத்தோலிக்க திருஅவை முக்கிய பங்காற்றுகின்றது என்று பாராட்டினார்.

நாம் ஒருவர் ஒருவரிடமிருந்து கர்றுக்கொள்வதால், இந்த விவகாரத்தில் பணியாற்ற விரும்புவர்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும், Beauchere அவர்கள் கூறினார்.

உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த உலக மாநாட்டை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். இம்மாநாட்டில், சமூக அறிவியலாளர்கள், பொதுமக்கள் தலைவர்கள், மதங்களின் பிரதிநிதிகள் உட்பட பல்வேறு துறைகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : CNA/EWTN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.