2017-10-06 10:28:00

உடன்பிறப்பு உணர்வும், மனிதாபிமானமும் தோல்வி கண்டுள்ளன


அக்.05,2017. போர், சித்ரவதைகள், இயற்கைப் பேரிடர், மற்றும், ஏழ்மையினால் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் மக்களுக்கு, செபத்தையும் ஆதரவையும் வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு கதவுகளைத் திறந்திருக்கும் நாடுகளுக்கு நன்றியை வெளியிடுவதாக ஐ.நா. அவைக்கூட்டத்தில் தெரிவித்தார் பேராயர் இவான் யூர்க்கோவிச்.

புலம்பெயர்வோரின் பாதுகாப்பு குறித்து ஐ.நா. அவையினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், உலக அளவில், புலம்பெயர்வோர், பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டிய சூழலே தொடர்கின்றது என்றார், ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கான திருப்பீட தூதர் பேராயர் யூர்க்கோவிச்.

நாட்டின் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சில நாடுகள், புலம்பெயர்ந்தோரை வரவேற்க மறுப்பதால், புலம்பெயர்வோரின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படுவதுடன், சட்டவிரோதமாக அவர்களை வேறு நாடுகளில் குடியமர்த்த சில குழுக்கள் பணம் பெற்று உதவுவதும் தொடர்கிறது என்றார் பேராயர்.

மனித குலத்தின் உயரிய மதிப்பீடுகளாகிய உடன்பிறப்பு உணர்வும், மனிதாபிமானமும் இன்று பாராமுகம் எனும் போக்கால் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன என்ற கவலையையும் வெளியிட்ட பேராயர் யுர்க்கோவிச் அவர்கள், ஒருமைப்பாட்டுணர்வுடனும், மனிதாபிமானத்துடனும், புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

தங்கள் சொந்த நாடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில், அரசியல் சமூகம், பொதுமக்கள் சமுதாயம், அனைத்துலக அமைப்புக்கள், மத நிறுவனங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய அனைத்துலக ஒன்றிணைந்த அமைப்பு உருவாக்கப்படவேண்டியதன் தேவை உள்ளது எனவும் கூறினார் பேராயர்.

போரினால் பாதிக்கப்பட்டு பக்கத்து நாடுகளில் அடைக்கலம் தேடும் மக்களுக்கு, சிறப்பு தங்கும் அனுமதி வழங்குதல், அடைக்கலம் தேடி புகுந்த நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குதல், குடும்பங்கள் ஒன்றிணைய வழிவகுத்தல், குழந்தைகளுக்கு கல்வி, தடுப்புக்காவலில் புலம்பெயர்ந்தோரை வைக்கும் நிலை அகற்றல் போன்ற பரிந்துரைகளையும் ஐ நா. அவையில் முன்வைத்தார், பேராயர் யூர்க்கோவிச்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.