2017-10-06 15:33:00

ஒருவர் தன் பாவங்களுக்காக வெட்கப்படுவது கடவுளின் அருள்


அக்.06,2017.  நான் நீதிமான் என்றோ, நான் இவரைப்போல அல்லது அவரைப் போல இல்லை என்றோ, எவராலும் சொல்ல முடியாது என்றும், நாம் எல்லாரும் கொண்டிருக்கும் முதல் பெயர் பாவி என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளி காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிறைவேற்றிய திருப்பலியில், “நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது. இன்று நமக்கு தலைக்குனிவுதான்” என்ற, பாரூக்கு இறைவாக்கினரின் வாக்கை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனிதரின் பாவநிலை மற்றும், மனிதர் பாவத்திற்காக வருந்த வேண்டியது குறித்து மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, குருக்கள், அரசர்கள், தலைவர்கள், மூதாதையர்கள், இறைவாக்கினர்கள் ஆகிய எல்லாருமே பாவிகள் என்று, பாரூக்கு சொல்வதைக் குறிப்பிட்டார்.

கடவுள் நம்மிடம் கேட்பதற்கு மாறாக நாம் செய்வதால் நாம் பாவிகள் என்றும், அவர் நம் இதயங்களில் பேசியுள்ளார் என்றும் விளக்கிய திருத்தந்தை, பாவத்தை நினைத்து வெட்கப்பட்டு நாம் தலைகுனியும்போது, குணப்படுத்தும் கதவுகள் திறக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

பாவம், துவைக்கும்போது அகற்றப்படும் கறை போன்றது அல்ல என்றும், எல்லா நன்மையும் நிறைந்த கடவுளுக்கு எதிராக கேவலமாகப் புரட்சிசெய்வதே பாவம் என்றும்,  ஒருவர் பாவத்தை, சோர்ந்துவிடாமல், இவ்வாறு நோக்கினால், இறைவாக்கினர் பாரூக்கு அவர்களின் கருத்துப்படி, அதுவே கடவுளின் அருள் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விசுவாசிகளிடம் கூறினார்.

நம் பாவங்களுக்காக கடவுளிடம் தாழ்ச்சியுடன் மன்னிப்பு கேட்போம், அவர் நம்மை மன்னித்து அரவணைத்துக் கொள்வார் என்றும், கடவுள் தம் வல்லமையை இரக்கத்திலும் மன்னிப்பிலும் வெளிப்படுத்துவதற்கு அவருக்கு நன்றியுள்ளவர்களாக வாழ்வோம் என்றும் கூறி, மறையுரையை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.