2017-10-06 16:13:00

திருத்தந்தை, லித்துவேனிய பிரதமர் Skvernelis சந்திப்பு


அக்.06,2017. லித்துவேனிய குடியரசின் பிரதமர் Saulius Skvernelis அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், லித்துவேனிய பிரதமர் Skvernelis.

பல நூற்றாண்டுகளாக லித்துவேனியாவின் பொதுநலனுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள், திருப்பீடத்திற்கும் லித்துவேனியாவிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், இறையடியார் Teofilius Matulionis அவர்கள், அண்மையில் முத்திப்பேறுபெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

இளையோர் நாட்டைவிட்டு வெளியேறுதல், லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், புலம்பெயர்வோரை வரவேற்றல், உலகளாவிய அமைதி போன்ற விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

லித்துவேனியாவின் அடையாளமாக, மரத்தாலான துன்புறும் இயேசுவின் திருவுருவத்தை, திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார், லித்துவேனிய பிரதமர் Skvernelis.  

திருத்தந்தையும், அமைதியைக் குறிக்கும், ஒலிவக்கிளை கொண்ட ஒரு பதக்கத்தையும்,

"Laudato si'" உட்பட, திருத்தந்தையின் ஒருசில திருமடல்கள் மற்றும், திருத்தூது அறிவுரைத் தொகுப்புகளை, லித்துவேனிய பிரதமருக்குக் கொடுத்தார்.

மேலும், Knights of Colombus பிறரன்பு அமைப்பின் உயர்தலைவர் Carl A. Anderson அவர்களையும், இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.