2017-10-06 10:37:00

பாசமுள்ள பார்வையில்...: தாயின் போதனைகள் துணை நிற்கும்


இரவில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார் இலாசர். திடீரென அவர் முன் தோன்றிய வானதூதர் அவரை நோக்கி, 'இன்று நீ என்னுடன் சொர்க்கத்திற்கு வருகிறாய். உன்னுடன் யாரையாவது அழைத்துவர விரும்பினால், அவர்களையும் அழைத்துவர உனக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. உனக்கு மிக வேண்டியவர்கள் யார்? உன் தாயா? மனைவியா? குழந்தைகளா? அல்லது நண்பர்களா?' எனக் கேட்டார். இலாசர் சொன்னார், ' என் நண்பர்கள் வேண்டாம். அவர்கள் இன்னும் பல காலம் உலகில் வாழ்ந்து அனுபவிக்கட்டும். என் குழந்தைகள் இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. என் மனைவியோ, ஒரு நல்ல தாயாக இருந்து என் பிள்ளைகளைக் கவனிக்க வேண்டியிருப்பதால், அவர்களும் வேண்டாம்' என்று. உடனே, அந்த வானதூதர் இலாசரை நோக்கி, 'அப்படியானால் உன் தாயை அழைத்துச் செல்கிறாயா? ஏனெனில் அவர்கள் உன்னைவிட அதிக காலம் உலகில் இருந்தாகிவிட்டது. உன் குழந்தைகளைக் கவனிக்க உன் மனைவி இருக்கிறார். உம் அம்மாவை அழைத்துச் செல்வோமா? என்று கேட்டார். இலாசர் அமைதியாகச் சொன்னார், ' என் தாய், இந்த ஊரில் ஆசிரியராக இருக்கிறார். என்னை நரகத்திற்கு அழைக்காமல், சுவர்க்கத்திற்கு நீங்கள் அழைப்பதற்கு, என் தாயின் வளர்ப்ப்பு முறையே காரணம். அவர்கள் இன்னும் சிறிது காலம் உலகில் இருந்தால், இன்னும் நிறைய பிள்ளைகளை நல்லவர்களாக உருவாக்குவார்கள். எனவே, என் தாய் இங்கேயே இருக்கட்டும். என் தாய் இதுவரை எனக்குக் கற்றுத்தந்த நல்ல விடயங்களை மட்டும், எனக்குத் துணையாக, என்னுடன் எடுத்துச் செல்ல அனுமதியுங்கள்' என்று முடித்தார் இலாசர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.