சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ நிகழ்வுகள்

திருத்தந்தை : நன்றாக உருவாக்கப்பட்ட அருள்பணியாளர்கள் அவசியம்

குருக்கள் பேராயம் நடத்திய பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

07/10/2017 14:31

அக்.07,2017.  குருத்துவ பயிற்சி என்பது, நம் வாழ்வின் செயல்களைச் சார்ந்தது அல்ல, ஆனால், அது முதலில், நம் வாழ்வில் கடவுள் ஆற்றும் செயலைச் சார்ந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்கள் குழு ஒன்றிடம் கூறினார்.

குருத்துவ இறையழைத்தலின் கொடை (Ratio Fundamentalis) என்ற தலைப்பில், திருப்பீட குருக்கள் பேராயம் நடத்திய பன்னாட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட 268 பிரதிநிதிகளை, வத்திக்கானிலுள்ள கிளமெந்தினா அறையில் இச்சனிக்கிழமையன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  குருத்துவ உருவாக்குதலை குயவர் கையிலுள்ள மண்கலத்தை (எரே.18,1-10) ஒப்புமைப்படுத்தி விளக்கினார்.

திருஅவை, நன்றாகப் பயிற்றுவிக்கப்பட்ட அருள்பணியாளர்களைக் கொண்டிருந்தால் மட்டுமே, விசுவாசத்தைப் புதுப்பிப்பதற்கும், இறையழைத்தலின் வருங்காலத்திற்கும் உதவுவதாக இருக்கும் என்றும் கூறியத் திருத்தந்தை, நிலைத்த பயிற்சிக்கு, முதலும், முக்கிய பொறுப்பாளர்களாக இருப்பவர்கள், அருள்பணியாளர்களே என்றும் கூறினார்.

இரண்டாவதாக, அருள்பணியாளர்கள் சிறப்பாகப் பயிற்றுவிக்கப்படுவதற்கு, பயிற்சியாளர்களும், ஆயர்களும் பொறுப்பானவர்கள் என்றும், இவர்கள் கடவுளின் பணியோடு ஒத்துழைக்கவில்லையெனில், நன்றாக உருவாக்கப்பட்ட அருள்பணியாளர்களை நாம் கொண்டிருக்க இயலாது என்று கூறினார்.

குருத்துவ வாழ்விற்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும்போது சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, இறைமக்களையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறினார்.

குயவரின் கையில் நாம் இருக்கும்போது, நாம் எவ்வாறு உருவாக்கப்பட விரும்புகிறோம் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, செபமாலை அன்னை மரியாவின் விழாவாகிய இந்நாளில், குயவராகிய இறைவனின் கையில் தம்மைத் தாழ்மையுடன் ஒப்படைத்த அந்த அன்னையின் பரிந்துரையைக் கேட்போம் என்று கூறி, தனக்காகச் செபிக்க மறக்கவேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

07/10/2017 14:31