2017-10-07 14:38:00

செபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பு


அக்.07,2017. “செபமாலை, கிறிஸ்துவின் பேருண்மைகளின் தொகுப்பாகும். அப்பேருண்மைகளை, தம் விசுவாச மற்றும் அன்பின் கண்களால் பார்ப்பதற்கு நமக்கு உதவும் அன்னை மரியாவுடன் இணைந்து, அவற்றை நாம் தியானிக்கின்றோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று கூறியுள்ளார்.

செபமாலை அன்னையின் திருவிழாவான, அக்டோபர் 07, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டரில், செபமாலையின் மேன்மையை  எடுத்தியம்பியுள்ளார்.

Lepanto எனுமிடத்தில், ஐரோப்பிய கிறிஸ்தவப் படைகள், துருக்கியர்களோடு நடத்திய போரின்போது, திருத்தந்தை புனித ஐந்தாம் பத்திநாதர் (Pius V) அவர்களின்  தூண்டுதலால் கிறிஸ்தவர்கள் செபமாலை செபித்தனர். அப்போரில் கிறிஸ்தவப் படைகள் வெற்றி அடைந்தன. இது நடந்தது 1571ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியாகும். இதற்கு இறைவனுக்கு நன்றிகூரும் விதமாக, திருத்தந்தை புனித ஐந்தாம் பத்திநாதர் அவர்கள், 1571ம் ஆண்டில், வெற்றியின் அன்னை மரியா விழாவை உருவாக்கினார்.

பின், 1573ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் கிரகரி அவர்கள், இவ்விழாவை புனித செபமாலை விழாவாக மாற்றினார். இவ்விழா, உலகளாவிய திருஅவையில் சிறப்பிக்கப்பட வேண்டுமென்று, திருத்தந்தை 11ம் கிளமென்ட் அவர்கள், 1716ம் ஆண்டில் அறிவித்தார். 1960ம் ஆண்டில், புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், இவ்விழாவை, செபமாலை அன்னையின் திருவிழாவாக மாற்றினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.