2017-10-07 14:48:00

திருத்தந்தை, குரோவேசிய பிரதமர் சந்திப்பு


அக்.07,2017. குரோவேசியக் குடியரசின் பிரதமர் Andrej Plenković அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் நேரடிச் செயலர் பேரருள்திரு Antoine Camilleri ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், குரோவேசிய பிரதமர் Plenković.

குரோவேசியாவின் பொதுநலனுக்கு கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள், திருப்பீடத்திற்கும் குரோவேசியாவிற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், முத்திப்பேறுபெற்ற கர்தினால் Alojzije Stepinac அவர்கள் பற்றி குரோவேசிய மற்றும் செர்பிய வல்லுனர்கள் நடத்திவரும் ஆய்வு போன்றவை, இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

ஐரோப்பாவின் வருங்காலம், போஸ்னியா-எர்செகொவினாவிலுள்ள குரோவேசிய மக்களின் நிலை உட்பட, மேலும் சில விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

Andrej Plenković அவர்கள், 2016ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியிலிருந்து, குரோவேசியாவின் பிரதமராகப் பணியாற்றி வருகிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.