2017-10-09 15:44:00

நல்ல சமாரியர் கிறிஸ்துவின் பேருண்மையை வெளிப்படுத்துகிறார்


அக்.09,2017. கிறிஸ்தவர்கள், நல்ல சமாரியரை மிகுந்த ஆர்வத்துடன் பின்பற்றுமாறு வலியுறுத்திய அதேவேளை, கிறிஸ்துவைப் போன்று, தேவையில் இருப்போர் எழுந்து நடப்பதற்கு உதவிசெய்ய வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்கள் காலையில் மறையுரையாற்றினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை நிறைவேற்றிய திருப்பலியில், லூக்கா நற்செய்தியிலுள்ள நல்ல சமாரியர் உவமையில் வருகின்ற பல்வேறு கதாப்பாத்திரங்களின் எண்ணப்போக்கு குறித்து மறையுரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எனக்கு அடுத்திருப்பவர் யார்? என, மறைநூல் அறிஞர் இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு, இந்த உவமை வழியாக, இயேசு பதில் சொல்லியிருப்பதை விளக்கிய திருத்தந்தை, கடவுளின் மனிதரான குரு, சட்டத்தை நுணுக்கமாய்க் கடைப்பிடிக்கும் லேவியர், எல்லாருமே காயம்பட்ட மனிதரைக் கடந்து சென்றனர், இது நம் மத்தியில், மிகவும் பொதுவான பழக்கமாக உள்ளது என்று கூறினார்.

ஆனால், பாவியும், வேறு மதத்தவருமான சமாரியரே காயம்பட்ட மனிதர்மீது இரக்கம் கொண்டு, அவருக்கு உதவினார் என்றும், நமக்காகத் தம்மையே தாழ்த்தி, ஊழியராகி, உயிரைக்கொடுத்த கிறிஸ்துவின் பேருண்மையை, நல்ல சமாரியர் வெளிப்படுத்துகிறார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விசுவாசிகளிடம் கூறினார்.

இந்த உவமையை கிறிஸ்தவர்கள் மீண்டும் மீண்டும் வாசித்து, இந்த உவமையில் நாம் எந்தக் கதாப்பாத்திரமாக இருக்கிறோம் எனவும், தேவையில் இருக்கும் அயலவரை இயேசு போல் நாம் நெருங்குகின்றோமா எனவும் சிந்திக்குமாறும், மறையுரையில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.