2017-10-09 14:13:00

பாசமுள்ள பார்வையில்.. யூத இன ஒழிப்பு சிறாரின் அன்னை


1910ம் ஆண்டில் போலந்து நாட்டின் Otwoc எனுமிடத்தில், பிறந்த ஐரீனா ஷென்ட்லர் (Irena Sendler) அவர்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். ஆயினும், இவர் யூத இன ஒழிப்பு சிறாரின் அன்னை என அழைக்கப்படுகிறார். காரணம், இரண்டாம் உலகப் போரின்போது, ஷின்ட்லர் குழு, வார்சா யூத வதை முகாமிலிருந்து 2,500 யூதக் குழந்தைகள் மற்றும் சிறாரைக் காப்பாற்றியது. இவர்களில் நானூறு பேரை, ஷின்ட்லரே காப்பாற்றினார். இரண்டாம் உலகப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, வார்சா நகர் சென்று, அங்கு நகராட்சியில் சமூகநலத் துறையில் வேலையில் சேர்ந்தார் ஷென்ட்லர். 1939ம் ஆண்டில் நாத்சி ஜெர்மானியர்கள் போலந்தை ஆக்ரமிக்கத் தொடங்கியவுடன், தன்னுடன் பணியாற்றிய சமூகநல ஆர்வலர்களின் உதவியுடன், யூதக் குடும்பங்களுக்கு உதவுவதற்காக, மூவாயிரத்திற்கு மேற்பட்ட போலி ஆவணங்களை இவர் தயார் செய்தார். இது மிகவும் ஆபத்தான வேலை என்பது, ஷென்ட்லருக்குத் தெரியும். ஏனென்றால், ஜெர்மனி ஆக்ரமித்திருந்த போலந்தில், யூதர்களுக்கு, எந்தவித உதவிகளைச் செய்பவர் யாராயிருந்தாலும், அவர் மட்டுமின்றி, அவரின் முழுக்குடும்பமும், குடும்பத்தைச் சார்ந்த அனைவருமே, மரணதண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என, நாத்சி அரசு, 1941ம் ஆண்டு  அக்டோபரில் அறிவித்திருந்தது. இவர், யூதர்களுக்கு உதவிசெய்வதற்கென மறைந்துசெயல்படும் Żegota எனப்படும் ஒரு நிறுவனத்தில், யூதச் சிறார் பிரிவுக்கு, 1943ம் ஆண்டில் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர், சமூகநலவாழ்வுத் துறையில் வேலை செய்ததால், typhus என்ற உயிர்க்கொல்லி நோய், வார்சா யூத வதை முகாமில் பரவியுள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்கு சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். இந்த முகாமில் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள் சிறைவைக்கப்பட்டிருந்தனர் எனச் சொல்லப்படுகிறது. இந்த முகாமிற்கு ஷென்ட்லர் சென்றபோதெல்லாம், யூதர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதன் அடையாளமாக, தாவீதின் விண்மீன் என்ற பதக்கத்தை அணிந்திருந்தார். அங்கு, அம்மக்களின் நலவாழ்வைப் பரிசோதிப்பதுபோல், தன் உடன்பணியாளர்களுடன் சேர்ந்து யூதக் குழந்தைகளையும், இளம்சிறாரையும் கடத்திவந்தார். சிலநேரங்களில், அவசர மருத்துவ வாகனங்களிலும், இரயில் போன்ற சிறிய வண்டிகளிலும், இன்னும் சிலநேரங்களில் பொட்டலங்களிலும், பெட்டிகளிலும், இவைபோன்ற பல்வேறு வழிகளில் அவர்களைக் கடத்திவந்தார். இவ்வாறு கடத்திவந்த குழந்தைகளையும், இளம்சிறாரையும், பல துறவற அருள்சகோதரிகள் இல்லங்களிலும், யூதர்கள் அல்லாத போலந்து கிறிஸ்தவக் குடும்பங்களிலும் கொடுத்து காப்பாற்றச் செய்தார். இவரோடு சேர்ந்து பணியாற்றிய ஏறத்தாழ முப்பது தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 1943ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி ஷென்ட்லர் அவர்களை நாத்சி அதிகாரிகள் கைது செய்து Pawiak சிறைக்கு அனுப்பினர். சிறையில் அவரோடு தொடர்புடைய ஆட்களின் பெயர்களை அறிவதற்காகச் சித்ரவதைப்படுத்தினர். ஷென்ட்லர் மறுத்ததால் அவருக்கு மரண தண்டனை தீர்ப்பளித்தனர். ஆயினும், Żegota உறுப்பினர்கள், சிறைக் காவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்து, 1944ம் ஆண்டு பிப்ரவரியில், ஷென்ட்லரை சிறையிலிருந்து வெளிக்கொணர்ந்தனர். ஹிட்லரின் யூத இன ஒழிப்பின்போது, ஐரீனா ஷென்ட்லர் அவர்கள் ஆற்றிய துணிச்சல்மிக்க செயல்களைப் பாராட்டி, 1965ம் ஆண்டில் இஸ்ரேல் அரசு “நாடுகள் மத்தியில் நேர்மையாளர்” என்ற Yad Vashem விருதை வழங்கியது. திருத்தந்தையும் அவருக்குப் பாராட்டு கடிதம் எழுதினார். மேலும் பல விருதுகளையும் பெற்றுள்ள ஐரீனா ஷென்ட்லர் அவர்கள், 2008ம் ஆண்டு மே 12ம் தேதி, தனது 98வது வயதில் வார்சாவில் காலமானார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.