2017-10-09 16:53:00

மிஜோராமில் இந்து தெய்வச் சிலைகள் எரிக்கப்பட்டதற்கு கண்டனம்


அக்.09,2017. இந்தியாவின் மிஜோராம் மாநிலத்தில், கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும், ஒரு பிரிவின் குழு ஒன்று, இந்துமத தெய்வச் சிலைகளையும், இந்திய தேசியக் கொடியையும் எரித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளவேளை, இச்செயலுக்கு, மிகுந்த கவலையோடும், வேதனையோடும் இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர் என ஆசியச் செய்தி கூறுகின்றது.

மிஜோராம் மாநிலத்தின் Lunglie மாவட்டத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் இந்த வன்செயல் பற்றி, கண்டன அறிக்கை வெளியிட்ட, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலர் ஆயர் தியோடர் மஸ்கரேனஸ் அவர்கள், இச்சம்பவம் அதிர்ச்சியளிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

பிற மதத்தவரின் உறுப்பினர்களுக்கு, கிறிஸ்துவின் பெயரால், யாராலும் அவமரியாதை செய்ய முடியுமா என்ற கேள்வியை எழுப்பி, இச்சம்பவம் குறித்து, கத்தோலிக்க ஆயர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார், ஆயர் மஸ்கரேனஸ்.

மதங்கள், பாலங்களைக் கட்டுவதற்காகவே உள்ளன என்றும் கூறியுள்ள ஆயர் மஸ்கரேனஸ் அவர்கள், இச்சம்பவம் குறித்து கவலையடைந்துள்ள மிஜோராம் ஆயர் Stephen Rotluanga அவர்களுடன் தொடர்புகொண்டு நிலவரத்தை அறிந்து வருவதாகவும் கூறினார்.

கிறிஸ்தவ சமூகம், எப்போதும் தேசிய ஒற்றுமைக்கும், மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் உழைக்கின்றது என்றும், அமைதியை அன்புகூரும் கிறிஸ்தவ சமூகம், இந்தியா மீது என்றும் அன்புகொண்டுள்ளது என்றும் கூறினார் ஆயர் மஸ்கரேனஸ். 

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.