2017-10-10 15:47:00

இறைவனின் எல்லாம்வல்ல வல்லமை இரக்கத்தில் வெளிப்படுகின்றது


அக்.10,2017. கடின இதயங்கள் இறைவனின் இரக்கத்தைப் புரிந்து கொள்ளமாட்டா என்றும், இறைவனின் இரக்கத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால், அதனைப் புரிந்து கொள்வதற்கு இறைவனிடம் மன்றாட வேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவாக்கினர் யோனா நூல் பற்றியும், நம் இதயங்களைத் திறந்து, அனைத்தின்மீதும் வெற்றிகாணும், இறைவனின் இரக்கம் பற்றியும், திருவழிபாடு, இரண்டாவது நாளாக, நம்மைச் சிந்திக்க வைத்துள்ளது என்று கூறினார்.

நினிவே நகர் மக்களை மனம் மாற்றுமாறு ஆண்டவர் இறைவாக்கினர் யோனாவைக் கேட்டது, அதற்கு அவர் முதலில் மறுப்பு தெரிவித்து தப்பித்து ஓடியது, பின் அந்நகர மக்களுக்குப் போதித்தது ஆகியவற்றை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோனா பிடிவாதமான மனதைக் கொண்டிருந்தார் என்று கூறினார்.

இறைவனின் இரக்கம் என்றால் என்ன என்பதை, கடினமான, பிடிவாதமான இதயங்கள் புரிந்துகொள்வதில்லை என்றும், அத்தகைய மனிதர்கள் யோனா போன்றவர்கள் என்றும் விளக்கிய திருத்தந்தை, இறைவனின் எல்லாம்வல்ல வல்லமை, அவரின் இரக்கத்திலும், மன்னிப்பிலும் முதலில் வெளிப்படுகின்றது என்பதை, கடின இதயத்தவர் மறந்து விடுகின்றனர் என்று கூறினார்.

இறைவன், யோனாவின் பிடிவாதமான மற்றும், இறுக்கமான குணத்தைப் பார்த்து அவரைக் கைநெகிழ்ந்திருக்கலாம், மாறாக, இறைவன், அவரிடம் பேசி, சரிப்படுத்தி, நினிவே மக்களுக்கு அவர் செய்தது போன்று, யோனாவைக் காப்பாற்றினார் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பொறுமையுள்ள இறைவன், இதயங்களை விரிவுபடுத்த தெரிந்த அவர், எப்படி அன்புசெலுத்த வேண்டுமென்பதை அறிந்திருக்கிறவர் என்றும் மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மூன்றே பக்கங்கள் கொண்ட சிறிய அளவிலான யோனா நூலை எடுத்து வாசித்து, ஆண்டவர் எவ்வாறு செயல்பட்டார், அவரின் இரக்கம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து, அவரின் இரக்கத்திற்கு நன்றி சொல்லுமாறு விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.