2017-10-11 16:42:00

சாம்பலில் பூத்த சரித்திரம்:அர்மேனியாவும் கிறிஸ்தவமும் பாகம்1


அக்.11,2017. கிறிஸ்தவ வரலாற்றில், முதல் கிறிஸ்தவ நாடு என பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நாடு அர்மேனியா. இந்நாட்டின் கிறிஸ்தவ வரலாற்றை அறிவதற்கு, இந்நாட்டின் வரலாறு பற்றி முதலில் அறிவது உதவியாக இருக்கும். அர்மேனியா, கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில், தெற்கு கவ்காசுஸ் மலைப்பகுதியில் அமைந்துள்ள குடியரசு நாடாகும். இந்நாடு, மேற்கில் துருக்கி நாட்டையும், வடக்கில் ஜார்ஜியா நாட்டையும், கிழக்கில் அஜர்பைஜான் குடியரசையும், தெற்கில், ஈரானையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. வரலாற்று அர்மேனியாவில் பத்தில் ஒரு பகுதியையே தற்போதைய ஆர்மேனியா கொண்டிருக்கின்றது. எஞ்சிய பகுதி துருக்கி நாட்டுடன் இருக்கின்றது என செய்திகள் கூறுகின்றன. முன்னாள் சோவியத் யூனியனோடு இணைந்திருந்த இந்நாடு, 1991ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியன்று, சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து செல்வதாக அறிவித்து, தனி நாடானது.

அர்மேனியா அல்லது "Urartù அரசு" என அழைக்கப்படும் இந்நாடு, கி.மு. ஒன்பது மற்றும் ஏழாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் உருவாகி மலர்ந்தது. இந்நாட்டின் பகுதி, விவிலியத்தில் அரராத்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் வெள்ளப்பெருக்கின் முடிவில், நோவாவின் பேழை இந்த அரராத்து மலைத்தொடரின் மேல் தங்கியது என, தொடக்க நூல் 8ம் பிரிவு, 4ம் சொற்றொடரில் வாசிக்கிறோம். எனவே, அர்மேனிய நாட்டுப் பகுதியில் கற்காலத்திலே மக்கள் வாழ்ந்தனர் என அறிய வருகிறோம். அர்மேனியாவின் தலைமுறைகள், இந்திய-ஐரோப்பிய மக்கள் எனவும், இவர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் குடியேறினர் எனவும் சொல்லப்படுகின்றது. இந்நாடு, முதலில், பெர்சியா, உரோம், பைசான்ட்டைன் ஆகிய பேரரசுகளாலும், பின், துருக்கியர்கள், செலூக்கியர்கள், மங்கோலியர்கள், Tartarகள் ஆகியோராலும் ஆக்ரமிக்கப்பட்டது. 1473ம் ஆண்டில் ஒட்டமான் பேரரசின்கீழ் வந்தது. கி.பி.17ம் நூற்றாண்டில், இதன் கிழக்குப் பகுதியை பெர்சியர்கள் ஆக்ரமித்தனர்.  இந்நாட்டின் மேற்குப் பகுதியில், 1894ம் ஆண்டுக்கும், 1918ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், துருக்கியர்கள் மிகக் கொடுமையான படுகொலைகளை நடத்தினர். 1915ம் ஆண்டு, ஒட்டமான் படைகளால், ஏறக்குறைய 15 இலட்சம், அர்மேனிய நாட்டு கிறிஸ்தவர்கள், துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இந்நடவடிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “மனிதப் படுகொலை”என்று குறிப்பிட்டிருக்கிறார். கி.பி. 301ம் ஆண்டில் அர்மேனியா, அதிகார்ரப்பூர்வமாக, கிறிஸ்தவத்தை அரசு மதமாக அறிவித்தது. இதன்மூலம், இந்நாடு வரலாற்றில் முதல் கிறிஸ்தவ நாடாக மாறியது என்பது கவனிக்கத்தக்கது.

அர்மேனிய இனப்படுகொலை என்பது, ஒட்டமான் பேரரசு காலத்தில் அர்மேனியர்கள், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆகும். இது முதலாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தது. இவ்வினப்படுகொலை 1915ம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் ஆரம்பமாகியது. இந்நாளில் அர்மேனியக் கல்வியாளர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் 250 பேரை ஒட்டமான் இராணுவத்தினர் கான்ஸ்டான்டிநோபிள் நகரில் கைது செய்தனர். அதன் பின்னர் இராணுவத்தினர் அர்மேனியப் பொதுமக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி, பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள பாலைநிலத்துக்கு அதாவது, தற்போதைய சிரியாவுக்கு நடைப்பயணமாக அழைத்துச் சென்றனர். வழிப்பயணத்தில் அவர்களுக்கு உணவோ, தண்ணீரோ வழங்கப்படவில்லை. வயது, பாலினம் ஆகிய வேறுபாடின்றி, பலர் படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான அர்மேனியர்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழ்வது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே. ஒட்டமான் பேரரசிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கி குடியரசு, படுகொலை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 15 இலட்சம் என்பதை, இன்றுவரை ஏற்க மறுத்துள்ளதுடன், அதற்கு “படுகொலை”எனும் சொல்லாடலைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் அதிருப்தி தெரிவித்து வருகின்றது. துருக்கி நாடு, இந்த இனப்படுகொலைகளை அங்கீகரிக்குமாறு, அண்மைக் காலங்களில், பல நாடுகளும் அமைப்புகளும் விண்ணப்பித்து வருகின்றன. இதுவரையில், இருபது நாடுகள் இப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள், இனப்படுகொலைகளே என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.

ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான அர்மேனியாவில், 95 விழுக்காட்டினர் இன்றும் கிறிஸ்தவர்கள். அர்மேனியாவின் மாபெரும் திருத்தூதர், ஒளிரச் செய்பவரான புனித கிரகரியாவார்(257-337). இப்புனிதரால்தான் அர்மேனியா கிறிஸ்தவ நாடானது. ஆயினும், திருத்தூதர்கள் பர்த்தலமேயு, ததேயுஸ் ஆகிய இருவரும் அர்மேனியாவில் நற்செய்தியை அறிவித்து அங்கே இறந்தனர் என பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்றது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.