2017-10-11 15:58:00

பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு


அக்.11,2017. உலக இயற்கைப் பேரிடர் தடுப்பு நாள், அக்டோபர் 13, வருகிற வெள்ளியன்று கடைப்பிடிக்கப்படும்வேளை, இறைவனின் படைப்பைப் பாதுகாக்குமாறு விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின் இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழலை மிகுந்த அக்கறையோடும், கவனத்தோடும் பாதுகாப்பதன் வழியாக, படைப்பைப் பாதுகாக்க இயலும் எனக் கூறினார்.

இயற்கைப் பேரிடர்களையும், இயற்கை சீரழிக்கப்படுவதையும் குறைப்பதற்குரிய ஒரு பண்பாட்டை ஊக்குவிக்குமாறு, நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும், சமூகநலனுக்குப் பொறுப்பானவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பொதுவான இல்லமாகிய பூமியின் பாதுகாப்பிற்கு, திட்டவட்டமான நடவடிக்கைகள், எடுப்பது, மிகவும் நலிந்த மக்களை ஆபத்தில் வைத்துக்கொண்டிருக்கும் இயற்கைப் பேரிடர்களைத் தடுக்க உதவும் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘பாதுகாப்பான இல்லம் : பேரிடர் ஆபத்துக்கு உள்ளாக்கப்படுவதைக் குறைத்தல், புலம்பெயர்வைக் குறைத்தல்’ என்ற தலைப்பில், அக்டோபர் 13, வருகிற வெள்ளியன்று, இயற்கைப் பேரிடர் தடுப்பு உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த உலக நாள் 1989ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளில், இயற்கைப் பேரிடர்களால், 13 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர் எந்று, ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.