சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

அடக்குமுறைகளுக்கு மத்தியில், துணிச்சலுடன் தொடர்ந்து சான்று..

கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளுக்கு புனித மேரி மேஜர் பசிலிக்காவில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றுகிறார் - AFP

12/10/2017 16:03

அக்.12,2017. கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் அனைத்துக் கிறிஸ்தவர்களும், தாங்கள் எதிர்கொள்ளும் துன்பகரமான அடக்குமுறைகளுக்கு மத்தியில், துணிச்சலுடன் தொடர்ந்து விசுவாசத்திற்குச் சான்றாக வாழுமாறு, இவ்வியாழன் காலை உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்காவில் நிறைவேற்றிய திருப்பலியில் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1917ம் ஆண்டு திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட, கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம், தன் நூறாம் ஆண்டை சிறப்பிப்பதை முன்னிட்டு அந்நிறுவனத்திற்குச் சென்று பார்வையிட்டபின், அதன் அருகிலுள்ள புனித மேரி மேஜர் பேராலயத்தில், அந்நிறுவனத்தின் அங்கத்தினர்கள் மற்றும் மாணவர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறைரையாற்றிய திருத்தந்தை, கீழை வழிபாட்டுமுறை பேராயம் மற்றும் கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம் துவக்கப்பட்டதற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்றார்.

இந்நிறுவனம் துவக்கப்பட்ட காலத்தில், உலகில் இடம்பெற்ற முதல் உலகப் போரையும், இக்காலத்தில் கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளில் ஏராளமான அங்கத்தினர்கள் அனுபவித்துவரும் சித்ரவதைகளையும் மறையுரையில் நினைவுக்கூர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இக்காலத்தின் துன்பங்களைப் பார்க்கும்போதும், தீயவர்கள் வளமான வாழ்வு வாழ்ந்து தண்டனையின்றி செல்லும்போதும், 'ஏன் இத்தகைய நிலைகள்' என இறைவனை நோக்கி கேள்வி எழும்புவது இயல்பாக இருக்கிறது என்றுரைத்த திருத்தந்தை,   இத்தகைய குரல்களுக்கு இறைவன் செவிமடுக்கிறார், அவரின் வார்த்தைகள் வழியாக பதில் வழங்குகிறார், அவர்களும் இறைவனில் தங்கள் நம்பிக்கையைத் தொடர்கின்றனர் என மேலும் கூறினார்.

அன்னை மரியாவும், ஏன் என்ற கேள்வியை, தன் வாழ்வில் கேட்டு அவைகளைத் தன் மனதில் நிறுத்தி தியானித்து வந்தார் என்ற திருத்தந்தை, கடவுள் நம் குரலுக்கு செவிமடுப்பார் என்ற நம்பிக்கையுடன் நாம் செபிக்கும்போது, அது நிச்சயம் செவிமடுக்கப்படுகின்றது, ஏனெனில், தட்டுங்கள் திறக்கப்படும் என்றும், மீனைக்கேட்கும் மகனுக்கு எந்த தந்தையும் பாம்பைக் கொடுக்கமாட்டார் என்றும் இறைமகனே கூறியுள்ளார் என்றார்.

நம் செபங்கள் எல்லாம் நம் இதயத்தையும் வாழ்வையும் முழுவதும் உள்ளடக்கியதாக உள்ளதா என்ற கேள்வியையும், நாம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கீழை வழிபாட்டுமுறை திருஅவைகள், தங்களின் துணிச்சலான சான்றுகளைத் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

12/10/2017 16:03