2017-10-12 16:13:00

கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம் துவக்கப்பட்ட 100ம்..


அக்.12,2017. 1917ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி கீழை வழிபாட்டுமுறை பேராயம் துவக்கப்பட்டதன் முதல் நூற்றாண்டையும், அதே ஆண்டு அக்டோபர் 15ம் தேதி கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம் துவக்கப்பட்டதன் நூறாண்டையும் சிறப்பிக்கும் இவ்வேளையில், சிறப்புச்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவரும், கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனத்தின் சான்சிலருமான கர்தினால் லியனார்தோ சாந்திரி அவர்கள் வழியாக வழங்கப்பட்டுள்ள இச்செய்தி, கீழை வழிபாட்டுமுறை தொடர்புடைய உயர்படிப்புக்கு வழங்கப்பட்டுவரும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கிறது.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம், பல்வேறு காலக்கட்டங்களில் கண்டுவந்த முன்னேற்றத்தையும், அது இயேசு சபையினரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து  1971ம் ஆண்டில் கீழை வழிபாட்டுமுறை திருஅவை சட்டத் துறை ஆரம்பிக்கப்பட்டு, இன்றுவரை சிறப்பாக இயங்கி வருவதையும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனத்தின் வரலாற்றை நோக்கும்போது, இந்நிறுவனம் வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றிய முக்கியத்துவம் தெரிகின்றது எனவும், மேற்கத்திய உலகில், கீழை வழிபாட்டுமுறையின் வளமையான மரபுச் செல்வங்கள் புரிந்துகொள்ளப்படுவதற்கு, இந்நிறுவனத்திற்கு கடமை உள்ளது எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கிழக்கில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கிவரும் எண்ணற்ற சவால்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டுமெனவும், திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நூறு ஆண்டுகளில், கீழை வழிபாட்டுமுறை பாப்பிறை நிறுவனம் ஆற்றியுள்ள பணிகளுக்கு, இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும், இந்நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட ஊக்கத்துடன் தன் பணியைத் தொடர்ந்து ஆற்றும் என்று தான் நம்புவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.