சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருத்தந்தை பிரான்சிஸ் \ மறையுரைகள்

உலகப்போக்கு குறித்து விழிப்பாயிருக்க திருத்தந்தை வேண்டுகோள்

சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

13/10/2017 16:10

அக்.13,2017. மெல்ல மெல்ல நம்மை உலகப்போக்குக்கு உட்படுத்தும் தீயஆவிகளிடமிருந்தும், புனித பவுல் கலாத்தியர்களிடம் கூறும் அறிவின்மையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுபவர், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்து ஒருவரே என்று, இவ்வெள்ளியன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலையில் நிறைவேற்றிய திருப்பலியில், பேயின் அதிகாரத்தால் பேய்களை ஓட்டுகிறார் என்று, இயேசுவை சிலர் குறைகூறுவது பற்றிய லூக்கா நற்செய்தி வாசகத்தை (11,15-26) மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்வாறு கூறினார்.

நாம் சோதனையில் விழாமல் இருப்பது குறித்து விழிப்பாயிருக்க வேண்டுமென ஆண்டவர் நம்மிடம் கேட்கின்றார் என்றும், விழிப்பாயிருப்பது என்பது, நம் இதயத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதாகவும் என்றும் கூறினார், திருத்தந்தை.

ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம்தேடும். இடம் கண்டுபிடிக்க முடியாமல், ‘நான் விட்டுவந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்’ எனச் சொல்லும். திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டிருப்பதைக் காணும். மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளை அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும் என்ற திருச்சொற்களையும் குறிப்பிட்டார், திருத்தந்தை.

இவ்வாறு பேய்கள், மனிதரின் வாழ்வில் ஓர் அங்கமாகி, தன் கருத்துக்களாலும், தூண்டுதல்களாலும் சப்தமின்றி அவ்வாழ்வில் நுழைந்து, மெது மெதுவாக, நம்மை உலகப்போக்குக்கு இட்டுச் செல்கின்றன என்றும் எச்சரித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்மை மீட்பவரான சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவை உற்று நோக்குகின்றோமா, மீட்பின் விலையைப் புரிந்துகொள்வதற்கு சிலுவைப்பாதை பக்திமுயற்சி செய்கின்றோமா என்று, கிறிஸ்தவர்கள் தங்களையே பரிசோதித்துப் பார்க்குமாறு, மறையுரையில் அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும்,  “பாத்திமா அன்னை மரியா காட்சியளித்ததன் இந்த நூறாம் ஆண்டு நிறைவில், அந்த அன்னையின் பாதுகாவலில் நாம் பெற்றுள்ள எண்ணற்ற வரங்களுக்கு, இறைவனுக்கு நன்றி சொல்வோம்” என்ற சொற்களை, தன் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 

13/10/2017 16:10