2017-10-13 16:40:00

திருத்தந்தை பிரான்சிஸ், லெபனான் பிரதமர் Hariri சந்திப்பு


அக்.13,2017. லெபனான் நாட்டு பிரதமர் Saad Rafic Hariri அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார், லெபனான் பிரதமர் Hariri.

இச்சந்திப்புக்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீட செய்தித் தொடர்பகம், லெபனான் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த பல்வேறு கூறுகள் மற்றும், மத்திய கிழக்கின் அண்மை நிலவரங்கள் குறித்து, கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று கூறியது.

லெபனானின் நிலையான தன்மையை வலுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகள், நாட்டின் பொதுநலனை முன்னேற்றுவதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு இடையே காணப்படும் பலனுள்ள உரையாடல் அதிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை, புலம்பெயரும் மக்களுக்கு இந்நாடு கொடுத்துவரும் ஆதரவு, அப்பகுதியில் இடம்பெறும்  சண்டைகளுக்கு, நீதியும், புரிந்துணர்வும் கொண்ட தீர்வு காணப்படுவதன் அவசியம் போன்றவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன எனவும் திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது. 

பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மதங்களுக்கு இடையே உரையாடல் இடம்பெற வேண்டியதன் முக்கியத்துவம், நாட்டின் வாழ்வில் திருஅவையின் வரலாறு மற்றும் பங்கை கருத்தில்கொண்டு, அமைதி மற்றும் நீதியை ஊக்குவிப்பதில், கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே இடம்பெற வேண்டிய ஒத்துழைப்பு ஆகியவையும், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் மேலும் கூறியது.

மேலும், இந்தியாவின் சீரோ-மலங்கராவின் திருவனந்தபுரம் பேராயர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் தொட்டுங்கல் அவர்கள், இவ்வியாழன் மாலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.