2017-10-14 15:24:00

செபமும் சுயஅர்ப்பணமும் அமைதியின் முயற்சிக்கு உதவும்


அக்.14,2017. மக்கள் மத்தியில் அமைதி நிலவுவதற்காக முயற்சிகள் எடுக்கும் முத்திப்பேறுபெற்ற பேரரசர் சார்லஸ் செப அமைப்பின், 130 அங்கத்தினர்களை,  இச்சனிக்கிழமை காலையில், வத்திக்கானில் சந்தித்து, உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அமைப்பினர், அமைதிக்காக எடுத்துவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தினார்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், முதல் உலகப் போரில் இடம்பெற்ற படுகொலைகளை நிறுத்துவதற்கு உறுதியான எண்ணத்துடன் எடுத்த அமைதிக்கான முயற்சிகளுக்கு, அரசியல் அதிகாரிகள் மத்தியில், முத்திப்பேறுபெற்ற பேரரசர் சார்லஸ் அவர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தார் என்றும் திருத்தந்தை கூறினார்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், அமைதிக்காக எடுத்த முயற்சிகளின் நூறாம் ஆண்டுச் சூழலில், இந்த அமைப்பினர் உரோம் நகரில் நடத்திய கூட்டம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, இறைத்திட்டத்தை தேடிக் கடைப்பிடித்தல், அமைதி மற்றும் நீதிப்பணியில் ஈடுபடுதல், வரலாற்றின் அநீதிகளுக்குப் பரிகாரம் செய்தல் ஆகிய இந்த செப அமைப்பின் கூறுகள் பற்றியும் பேசினார்.

முத்திப்பேறுபெற்ற பேரரசர் சார்லஸ் அவர்களின் வாழ்வில், இவை மூன்றும் தெளிவாக வெளிப்பட்டன என்றும், இக்காலத்தில் நாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு, நன்மனம் கொண்ட மனிதரின் ஒத்துழைப்பும், குறிப்பாக, செபமும், தியாகமும் அவசியம் என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆஸ்ட்ரியா-ஹங்கேரியின் பேரரசராக 1916ம் ஆண்டில் ஆட்சியில் அமர்ந்த முத்திப்பேறுபெற்ற பேரரசர் சார்லஸ் அவர்கள், 1922ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியன்று காலமானார். புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 2004ம் ஆண்டில், இவரை முத்திப்பேறுபெற்றவராக உயர்த்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.