2017-10-16 15:52:00

கிறிஸ்தவ அன்பை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்த வேண்டும்


அக்.16,2017. கிறிஸ்தவ அன்பை ஒவ்வொரு நாளும் நடைமுறைப்படுத்துமாறு, அனைத்து விசுவாசிகளுக்கும், இஞ்ஞாயிறன்று அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அக்டோபர் 15, இஞ்ஞாயிறு காலையில், நிறைவேற்றிய திருப்பலியில் 35, மறைசாட்சிகள் மற்றும் இறையடியார்களை,  புனிதர்களாக அறிவித்த திருத்தந்தை, கடவுளின் அன்புக்கு, ஆம் என்று, எவ்வாறு நாம் பதில் அளிப்பது என்பதை, இப்புதிய புனிதர்கள் நமக்குக் காட்டுகிறார்கள் என்று கூறினார்.

புனிதர்நிலை அறிவிப்பு திருப்பலியைக் காண்பதற்காக, வத்திக்கான் தூய பேதுரு வாளாகத்தில் கூடியிருந்த 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசுவாசிகளுக்கு மறையுரையாற்றிய திருத்தந்தை, இப்புனிதர்கள், கடவுளின் அன்புக்கு மேலெழுந்த வாரியாக அல்ல, மாறாக, தங்கள் வாழ்வின் இறுதிவரை, வாழ்வால், ஆம் என்று பதில் சொன்னார்கள் என்றார்.

திருமண விருந்து பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி மறையுரையாற்றிய திருத்தந்தை, இறைவனோடு உள்ள ஓர் அன்புக் கதையே கிறிஸ்தவ வாழ்வு என்றும், இவ்விருந்தில் பங்குகொள்ள நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும் கூறினார்.

ஆண்டவரே, நான் உம்மை அன்பு கூருகிறேன் என்று, ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஆண்டவரிடம் நாம் சொல்ல வேண்டும், ஏனென்றால், அன்பு ஒருமுறை இழக்கப்பட்டால், கிறிஸ்தவ வாழ்வு வெறுமையாக மாறிவிடும் என்றும், திருத்தந்தை கூறினார்.

அருள்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினரை உள்ளடக்கிய, பிரேசில் நாட்டின் முப்பது மறைசாட்சிகள், 1645ம் ஆண்டில், கத்தோலிக்கருக்கு எதிரான அடக்குமுறையில், Natalலில், ஹாலந்து நாட்டு கால்வனிஸ்ட் சபையினரால் கொல்லப்பட்டனர். இவர்கள், "Natal மறைசாட்சிகள்" என்று அழைக்கப்படுகின்றனர்.  

மெக்சிகோ நாட்டின் புதிய புனிதர்களான, Cristobal, Antonio, Juan ஆகிய மூவரும், மெக்சிகோவில் கத்தோலிக்கத்தை ஏற்ற முதல் பழங்குடியினத்தவர். "Tlaxcala சிறார் மறைசாட்சிகள்" என்று அழைக்கப்படும் இச்சிறார், 12க்கும், 13 வயதுக்கும் உட்பட்டவர்கள. இச்சிறார், கிறிஸ்தவத்தை மறுதலித்து, தங்களின் மரபுகளுக்குத் திரும்ப வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 1527ம் ஆண்டுக்கும், 1529ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டனர்.

இத்தாலிய கப்புச்சின் துறவு சபையின் Acriயின் புனித Angelo அவர்கள், 1739ம் ஆண்டில் காலமானார். இஸ்பெயின் நாட்டவரான, Piarist அருள்தந்தையர் சபையைச் சேர்ந்த புனித Faustino Miguez அவர்கள், 1831ம் ஆண்டில் பிறந்தவர். சிறுவர்கள் மட்டுமே கல்வி வாய்ப்பைப் பெறும் வசதியுடைய அக்காலத்தில், சிறுமிகளுக்கு பள்ளிகளைத் தொடங்கியவர் அருள்பணி Miguez.

இன்னும், “நற்செய்தியின் மகிழ்வும், அதை வாழ்வதன் அழகும், நம் வாழ்வுச் சான்று வழியாக, புனிதர்களோடு சேர்ந்து சுடர்விடுவதாக” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில், இஞ்ஞாயிறன்று வெளியானது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.