2017-10-16 14:11:00

பாசமுள்ள பார்வையில்.. சுயநலம் அகல, பொதுநலன் பெருக தாய்


கமலன் ஒரு சுயநலக்காரர். ஒரு நாள் அவர், ஊர் ஓரமாக உள்ள சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அந்தச் சாலையின் நடுவில் ஒரு முள்செடி கொத்தாகக் கிடந்தது. கமலன், அதை எடுத்து ஓரமாக வீசாமல், முள்செடியைத் தாண்டி வீட்டுக்குச் சென்றார். வீட்டில் நுழைந்த கமலன், காலணிகளைக் கழற்றிக்கொண்டே, "யாராவது முள்செடி குத்தி சாகட்டும்... எனக்கென்ன வந்தது? நல்லவேளை நான் பார்த்துவிட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இந்த முணுமுணுப்பைக் கேட்ட அவரின் மனைவி கமலா, நீங்க, உங்க சுயநலக் குணத்தை விடுவதா இல்லை, நீங்க திருந்துவதற்கு ஏதாவது ஒரு காரியம் நடக்கும், பாருங்களேன் என்று சொல்லி வாய் மூடுவதற்குள், பள்ளியிலிருந்து திரும்பிய மகன் பாலு,  நொண்டிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். உடனடியாக, கமலா, ஓடிப்போய் மகனின் காலைப் பார்த்தார். அம்மா, பள்ளியில் இருந்து நான் நடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்தச் சாலையில் கிடந்த முள்செடியில் தெரியாமல் கால் வைத்துவிட்டேன். அந்தச் செடியின் கூர்மையான முள்கள், “நறுக்’ என்று காலில் பாய்ந்துவிட்டன என்று சொன்னான் பாலு. மறுநாள் காலையில், பாலுவின் முள் தைத்த கால் பெரிதாக வீங்கிவிட்டது. வலி பொறுக்க முடியாமல் துடித்தான் பாலு. அவனை உள்ளூர் மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டினர். பாலுவின் பெற்றோர். பாலுவின் காலைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ”உங்கள் மகனின் காலில் விஷமுள் குத்தி, விஷம் பாதம்வரை பரவிவிட்டது. நகரத்துக்குப் போய் பெரிய மருத்துவரிடம் காட்டுங்கள்” என்றார் மருத்துவர். உடனே பாலுவைப் நகரத்துக்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய மருத்துவரிடம் காட்டினார்கள். அவர் பாலுவின் காலைப் பரிசோதித்து விட்டு, ”நல்ல வேளையாக உடனே வந்தீர்கள். சிறிது தாமதித்து வந்திருந்தாலும் பையனின் காலை எடுக்க வேண்டியிருந்திருக்கும்” என்று கூறிவிட்டுச் சிகிச்சை அளித்தார். அப்போது பாலுவின் அம்மா, தன் கணவரை முறைத்துப் பார்த்தார். சாலையின் நடுவில் கொத்தாகக் கிடந்த அந்த முள்செடியை உடனே அகற்றியிருக்கலாம் என்று நினைத்து, தன்னையே நொந்துகொண்டார் பாலுவின் அப்பா. தனது சுயநலத்தையும், தவறையும் எண்ணி மிகவும் வருந்தினார் அவர். அந்த நிகழ்வு, அந்தக் குடும்பத்தையே பொதுநலனில் மிகவும் அக்கறை கொள்ள வைத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.