2017-10-16 14:21:00

வாரம் ஓர் அலசல் – வறுமையிலும் செம்மை


அக்.16,2017. “கடுமையான உழைப்பே, மக்களை வறுமையில் இருந்து மீட்கும்” என்றவர், கர்மவீரர் காமராசர். குழந்தைப் பருவத்தை வறுமையில் கழித்து, தந்தையின் குறைந்த வருமானம் குடும்பச் செலவுகளுக்குப் போதாதபோது, பள்ளி நாள்களில், வீடுவீடாகச் செய்தித்தாள் விநியோகித்து தன் தந்தைக்கு உதவி, பிற்காலத்தில் அதே செய்தித்தாள்களில், தலைப்புச் செய்தியாய் மாறியவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். சென்னையில் MIT (Madras Institute of Technology) தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், விண்வெளிப் பொறியியல் பயின்று கொண்டிருந்தபோது, உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தந்தையை, இராமேஸ்வரம் சென்று பார்ப்பதற்கு, பயணச்செலவுக்குப் பணம் இல்லாது, படிப்புக்குப் பரிசாகக் கிடைத்த நூலை விற்கத் துணியும் அளவுக்கு வறுமையை அனுபவித்தவர் அப்துல் கலாம். தனக்கு அந்த நேரத்தில், கருணையுடன் பணம் கொடுத்து உதவிய அந்தப் பழைய புத்தகக் கடைக்காரரை, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நினைவுகூர்ந்து நெகிழ்வோடு நன்றி கூறியவர் கலாம். வறுமையிலும் செம்மையாய் வாழ்ந்து, நன்றி மறவாப் பண்பின் சிகரமாய் மின்னுகிறவர் அப்துல் கலாம்.

அக்டோபர் 15, இஞ்ஞாயிறன்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை, இந்தியத் தலைவர்கள் நினைவுகூர்ந்து சிறப்பித்தனர். நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. முடியாது என்ற நோய், நம்மில் பலரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதரால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. உன் கை ரேகையைப் பார்த்து உன் எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால், கையே இல்லாதவருக்குக்கூட எதிர்காலம் உண்டு... இவ்வாறெல்லாம் சொன்னவர் நம் அப்துல் கலாம் அய்யா அவர்கள்தான். இன்று பார் போற்றும் ஒரு மனிதராக விளங்குவதற்கு, அவரின் குடும்ப வறுமை எந்த விதத்திலும் தடையாக இருந்ததில்லை.

வறுமையை, உடல் உறுப்புக்குறைவைச் சுட்டிக்காட்டி, கையேந்தி காசு கேட்கும் மனிதரைப் பார்க்கின்றோம். ஆனால், உயிர் வாழ்வதற்கும், வாழ்வில் உயரே செல்வதற்கும், வறுமையோ, உடலில் மாற்றுத்திறனோ  தடையில்லை என்று வாழும் மனிதர்களைப் பார்த்து வியக்கின்றோம். பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜெனெய்ரோவில் 2016ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில், 21 வயது மாரியப்பன் தங்கவேலு அவர்கள் தங்கம் வென்றதை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. மாரியப்பன் அவர்களின் வாழ்வில் இத்தகைய மாற்றத்திற்குக் காரணமான அவரது பயிற்சியாளர் சத்யநாராயணா அவர்கள் சொன்னார் - ”இதற்கு முன், தனது இயலாமை காரணமாக, மாரியப்பன் தனது குடும்பத்தைச் சார்ந்திருந்தார். தற்போது அவரது குடும்பமே அவரைச் சார்ந்துள்ளது. இன்று மாரியப்பன், ஒரு கோடீஸ்வரர்” என்று. மாரியப்பன் அவர்கள் தனக்குக் கிடைத்த பரிசுத்தொகையிலிருந்து, முப்பது இலட்சம் ரூபாயை, அவர் பயின்ற பயிற்சி பள்ளிக்கு நன்கொடை அளித்திருக்கிறார். வறுமையிலும், கீழிலிருந்து மேல்நிலைக்கு உயர்ந்திருப்பவர் மாரியப்பன். தங்கத்திலும் தன்னடக்கத்துடன் வாழ்பவர் மாரியப்பன்.

 

வறுமையை வென்று கிரிக்கெட்டில் ஜெயித்திருப்பவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஐபிஎல் ஹீரோ நடராஜன். இப்போது இவர் எல்லாராலும் வியந்து பேசப்படுபவர். நடராஜன் அவர்களின் தந்தை நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாவார். தாயார், சாலையோர சிக்கன் மற்றும் ஸ்நாக்ஸ் கடை வைத்துள்ளார். ஐந்து உடன்பிறப்புகளில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமணச் செலவுகளை, 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார். கிரிக்கெட் விளையாடி வந்த வருமானத்தைக்கொண்டே இதைப் பூர்த்தி செய்துள்ளார். மேலும், கேரளாவில், 1200 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள Porinju Veliyath என்ற கோடீஸ்வரர், அமெரிக்காவில் வேலை செய்யும் தன் மகன் சன்னி வெலியத்துக்கு பதிவு அலுவலகத்தில் எளிமையாகத் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். எளிமையாக நடத்த வேண்டுமென்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இதற்கு இல்லை என்று அவர், தன் டுவிட்டரில் எழுதியிருக்கிறார். 

அக்டோபர் 16, உலக உணவு தினம். அக்டோபர் 17, இச்செவ்வாய் உலக வறுமை ஒழிப்பு தினம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அருள்பணி ஜோசப் ரிசென்கி (Joseph Wresinski) அவர்கள், “உலகில் ஏதாவது ஓரிடத்தில் வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவரது மனித உரிமை மீறப்படுகிறது“ என்று சொல்லியதோடு, வறுமையை ஒழிப்பதற்கு செயலிலும் இறங்கினார். இவரோடு சேர்ந்து, 1987ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி, பாரிஸ் மாநகரின் Trocadero மனித உரிமைகள் வளாகத்தில், எல்லாக் கண்டங்களிலிருந்தும், மனித உரிமை மற்றும் குடியுரிமை ஆர்வலர்கள் ஒன்றுகூடி உலகில் வறுமை ஒழிப்புக்கு குரல் கொடுத்தனர். அந்நிகழ்வில் ஒரு இலட்சம் பேர் கலந்துகொண்டனர் என வரலாற்று ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வே, ஐ.நா. நிறுவனம் உலக வறுமை ஒழிப்பு தினத்தை உருவாக்க காரணமானது. 1992ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதியன்று ஐ.நா. பொது அவை, இந்த உலக நாளை அறிவித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் 17, இச்செவ்வாயன்று இவ்வுலக தினத்தின் 25ம் ஆண்டு கடைப்பிடிக்கப்படுகிறது. “வறுமையை ஒழிப்பதற்கு அக்டோபர் 17ம் தேதி விடுத்த அழைப்பிற்குப் பதில் சொல்தல்: அமைதியான மற்றும் எல்லாரையும் உள்ளடக்கிய சமூகங்கள் நோக்கிய பாதையில்” என்ற தலைப்பில் இந்த உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதரின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை இழக்கப்படுகையில்,  மக்கள் மத்தியில் பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்தாடத் தொடங்குவதுடன் கொலை, கொள்ளை போன்ற தீமைகளுக்கும் வழியமைக்கிறது. வறுமையும் பட்டினியும், இன்று முழுஉலகையுமே உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரமான உயிர்கொல்லியாக மாறியுள்ளன. உலக உணவு தினமான அக்டோபர் 16, இத்திங்கள் காலையில், உரோம் நகரிலுள்ள ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை (FAO) நிறுவனத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், பசி, போர், காலநிலை மாற்றம் ஆகியவை பற்றிய பேச்சுக்களைக் குறைத்து, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு, உலகளாவிய சமுதாயத்தைக் கேட்டுக்கொண்டார். காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய ஒப்பந்தத்திலிருந்து சிலர் விலகிச் செல்வது கவலை தருகின்றது என்றும், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தல், உணவளிக்கப்படுபவரின் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்றவை, பிரச்சனைக்குத் தீர்வு காணாது என்றும் கூறினார். FAO நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்பட்ட இந்த உலக உணவு தின நிகழ்வில், திருத்தந்தையுடன், ஜி7 என்ற தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளின் வேளாண் துறை அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.  FAO நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் மூன்றில் ஒரு பகுதி, அதாவது ஏறத்தாழ 130 கோடி டன் உணவுப் பொருள்கள், ஒவ்வோர் ஆண்டும் வீணாக்கப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் பணக்கார நாடுகள், 22 கோடியே 22 இலட்சம் டன் அளவிலான உணவுப் பொருள்களை வீணாக்குகின்றன. இந்த அளவு, ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுப்பொருள்களுக்கு (23 கோடி டன்கள்)  ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இன்றைய உலகில், ஏறத்தாழ 74 கோடிப் பேர் புலம்பெயர்ந்தவர்கள். இந்த அளவு எண்ணிக்கை, உலகில் இதுவரை இருந்ததில்லை என்று, FAO நிறுவனத் தலைவர், Jose' Graziano da Silva அவர்கள், திருத்தந்தையிடம் தெரிவித்தார். “புலம்பெயர்வின் வருங்காலத்தை மாற்றுவதற்கு”என்ற தலைப்பில், இத்திங்களன்று உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

திருத்தந்தை கூறியுள்ளது போன்று, வறுமைக்கான காரணங்கள், வறுமையை ஒழிப்பதற்கான தீர்வுகள் போன்றவை பற்றி அலசி களத்தில் இறங்க வேண்டும். ஒருநாள், ஒரு பெண், சந்தையில் முட்டை விற்ற வயதானவரிடம், “முட்டை விலை எவ்வளவு என்று கேட்க, “ஒரு முட்டை ஐந்து ரூபாய்ம்மா?” என்றார் பெரியவர். “சரி, ஆறு முட்டைகளை 25 ரூபாய்க்கு கொடுப்பீங்களா?” எனக் கேட்டார் அப்பெண். “சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே. கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்,” என்றார் அப்பெரியவர். தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற மகிழ்வில், அப்பெண் முட்டைகளை வாங்கிக்கொண்டார். பிறகு தன் அழகான காரில், தன் தோழியை அழைத்துக்கொண்டு ஓர் உணவகத்திற்குச் சென்று, இருவரும் தாங்கள் விரும்பியதை வாங்கிச் சாப்பிட்டனர். அவர்கள் சாப்பிட்டது குறைவு, ஆனால் மீதம் விட்டது அதிகம். கட்டணத்தொகை 1,200 ரூபாய். 1,300 ரூபாயை அந்த உணவக நிர்வாகியிடம் கொடுத்து, மீதிச் சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் அப்பெண். ஆம். உணவக உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விடயம். ஆனால் இது, முட்டை விற்ற அந்த வயதானவருக்கு, வலி மிகுந்த விடயம்.

இக்காலத்தில் பரவலாக நடப்பது இதுதான். உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நம் தாராள குணத்தை காட்டுகிறோம். எனவே, சமுதாயப் போலித்தனங்களில் நாம் சிக்கிக்கொள்ளாமல் வாழ முயற்சிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

 








All the contents on this site are copyrighted ©.