2017-10-17 16:02:00

ஒவ்வொரு மனிதரும், பசியின்றி வாழ்வதற்கு உதவ வேண்டியது...


அக்.17,2017. “ஒவ்வொரு மனிதரும், ஏழ்மை மற்றும், பசியின்றி வாழ்வதற்கு உதவ வேண்டியது மனிதக் குடும்பத்தின் கடமையாகும்” என்று, திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.

அக்டோபர் 17, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டரில், உலகில் ஒவ்வொருவரும் பசியின்றி வாழ உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி, ஐ.நா. பொது அவை, உலக வறுமை ஒழிப்பு தினத்தை அறிவித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் 17, இச்செவ்வாயன்று இவ்வுலக தினத்தின் 25ம் ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டது. மேலும், உலகில் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா, கடந்த ஆண்டைவிட, மூன்று இடங்கள் பின்தங்கி, நூறாவது இடத்தில் உள்ளது என்று, உலகளாவிய உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

பட்டினியால் வாடும் நாடுகள் பற்றிய குறியீட்டுப் பட்டியலை, 119 நாடுகளில் ஆய்வுசெய்த இந்நிறுவனத்தின் அறிக்கையின்படி இலங்கை 84, சீனா 29, நேபாளம் 72, மியான்மர் 77, வங்கதேசம் 88, பாகிஸ்தான் 106, ஆப்கானிஸ்தான் 107 ஆகிய  இடங்களில் உள்ளன. பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள வட கொரியா, பங்களாதேஷ், ஈராக் ஆகிய நாடுகள்கூட இந்தப் பட்டியலில் இந்தியாவைவிட முன்னேறி உள்ளன.

ஆசிய நாடுகளின் பட்டியலில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.