2017-10-18 15:55:00

பிலிப்பீன்ஸ் கர்தினால் Vidal மரணம், திருத்தந்தை இரங்கல்


அக்.18,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் Cebu உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் ரிக்கார்தோ விதால் (Ricardo  Vidal) அவர்கள் காலமானதையடுத்து, தனது இரங்கலையும், செபத்தையும் தெரிவிக்கும் தந்திச் செய்தியை இப்புதனன்று அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Cebu உயர்மறைமாவட்டத்தின் பேராயர், Jose Palma அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், கர்தினால் விதால் அவர்கள், பிலிப்பீன்ஸ் திருஅவைக்கு ஆற்றியுள்ள அயராத சேவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், கர்தினால் விதால் அவர்கள், அந்நாட்டில் அனைத்து மக்கள் மத்தியில் உரையாடல் இடம்பெறவும், அமைதி நிலவவும், தொடர்ந்து அழைப்பு விடுத்தவர் என்றும் திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

கர்தினால் விதால் அவர்களின் மரணத்தோடு, திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 219 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 120 ஆகவும் மாறின.

கர்தினால் விதால் அவர்களின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட, Cebu உயர்மறைமாவட்டத்தின் பேச்சாளர் பேரருள்திரு Joseph Tan அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக, அக்டோபர் 11, கடந்த புதன்கிழமையன்று Perpetual Succour மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்தினால், சிகிச்சை பலனளிக்காமல், இப்புதன் காலையில், தனது 86வது வயதில் காலமானார் என அறிவித்துள்ளார்.

Mogpog நகரில் பிறந்த கர்தினால் விதால் அவர்கள், 1956ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருப்பொழிவு பெற்றார். 1982ம் ஆண்டு Cebu உயர்மறைமாவட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 2011ம் ஆண்டில் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இவர், 1985ம் ஆண்டில் கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.

பிலிப்பீன்ஸ் நாடு கஷ்டமான சூழலை எதிர்கொண்ட நேரத்தில், அமைதியை ஊக்குவிப்பவராகவும், துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாகவும் கர்தினால் விதால் அவர்கள் விளங்கினார் என்று, பிலிப்பீன்ஸ் தலத்திருஅவை பாராட்டியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.