2017-10-18 16:12:00

மனித சமுதாயத்திற்கெதிராக குற்றங்கள், ஆம்னெஸ்டி


அக்.18,2017. மியான்மாரில் பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கிய இன மக்கள், நாட்டைவிட்டு வெளியேறிவரும்வேளை, அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் மனித சமுதாயத்திற்கெதிராக குற்றங்கள் செய்து வருகின்றன என்று, Amnesty International என்ற, பன்னாட்டு மனித உரிமைகள் கழகம், இப்புதனன்று குறை கூறியது.

ரோஹிங்கிய இன மக்களில் 120 பேர் உட்பட, தனக்கு கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடுவதாகக் கூறியுள்ள இக்கழகம், ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக, திட்டமிட்ட, மற்றும் இரக்கமற்ற முறையில் இராணுவத்தின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளது.

முப்பது மருத்துவர்கள், நிவாரணப் பணியாளர்கள், செய்தியாளர்கள், பங்களாதேஷ் அதிகாரிகள் ஆகியோரிடம் பேட்டி கண்டுள்ள Amnesty International, ரோஹிங்கிய இன மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றி, “My World Is Finished” என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rakhine மாநிலத்தில், கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி, Rohingya புரட்சியாளர்கள், இராணுவ முகாம்கள் மீது, முப்பது இடங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இராணுவம் பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது என்று செய்திகள் கூறுகின்றன.

Rakhine மாநிலத்தின் வட பகுதியில், குறைந்தது 288 கிராமங்கள், தீயினால் முழுவதுமாக அல்லது பாதியாக அழிக்கப்பட்டுள்ளன என்று, Human Rights Watch நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.