2017-10-18 15:36:00

மொகதிஷு பயங்கரவாத தாக்குதல் குறித்து திருத்தந்தை கவலை


அக்.18,2017. சொமாலியா நாட்டுத் தலைநகர் மொகதிஷுவில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலில் சிறார் உட்பட, முன்னூறுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளவேளை, அத்தாக்குதலுக்கு, தனது கண்டனத்தை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இப்புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கியபின், மொகதிஷு நகரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற இப்பயங்கரவாத தாக்குதல், ஏற்கனவே துன்புறும் மக்கள்மீது நடத்தப்பட்டுள்ளதால், இது மிகவும் கண்டனத்துக்குரியது என்றும், இத்தாக்குதல் மிகவும் கவலையளிக்கின்றது என்றும் தெரிவித்தார்.

இத்தாக்குதலில் இறந்தவர்கள், காயமுற்றவர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சொமாலியா நாட்டு மக்கள் அனைவருக்காகவும், இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளவர்கள் மனம் திருந்த வேண்டுமெனவும், தான் செபிப்பதாகவும் கூறியத்  திருத்தந்தை, சிதைந்துள்ள சொமாலியா நாட்டில், எண்ணற்ற இன்னல்களுக்கு மத்தியில் அமைதிக்காக உழைப்பவர்களை ஊக்குவிப்பதாகவும் கூறினார்.

Mogadishuவில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில், ஏறத்தாழ எழுபது பேர், இன்னும் காணாமல்போயுள்ளனர் என்றும், இறந்தவர்களின் எண்ணிக்கை 302ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.