2017-10-19 16:47:00

கடவுளின் மீட்பின் கொடை எல்லாருக்கும் கதவைத் திறக்கின்றது


அக்.19,2017. இலவசமாக அளிக்கப்படும் மீட்பையும், கடவுள் நமக்கு நெருக்கமாக இருக்கின்றார் என்பதையும், அவரின் இரக்கத்தையும் மறப்பவர்கள், மனசாட்சியின் திறவுகோலை அகற்றி விடுபவர்கள் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழன் காலை மறையுரையாற்றினார்.

ஒருவரின் வாழ்வில் கடவுளோடு நெருக்கமும், செபமும் குறைபடுகையில், கோட்பாடுகளைப் போதிக்க இயலாது, இறையியலை, ஏன், நன்னெறியியலைக்கூட கற்க இயலாது என்றும், இவ்வியாழன் காலையில் நிறைவேற்றிய திருப்பலியில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில், தங்களை நீதிமான்கள் என்று கருதும் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் பற்றிக் கூறும் லூக்கா நற்செய்தி (லூக்.11:47-54) பகுதியை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் ஒருவரே நீதியுள்ளவர் என்பதை இயேசு, மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் உணரச் செய்தார் என்றும், சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள், தாங்களும் இறையாட்சியில் நுழையாமல், மற்றவர்களையும் நுழையவிடாமல், அறிவை மழுங்கடிக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

சட்டத்தைக் கடைப்பிடித்த மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள், கடந்தகால மனிதர்கள் மட்டுமல்ல, இன்றும், அவர்களில் பலர் உள்ளனர், இதனாலே, நம் மேய்ப்பர்களுக்காக நாம் செபிக்க வேண்டும் என்றும், திருத்தந்தை கூறினார்.  

கடவுளின் மீட்பின் கொடை நம் எல்லாருக்கும் கதவுகளைத் திறந்துள்ளது என்றும், நம்மை மீட்பதற்கு கடவுளே முயற்சி எடுக்கிறார் என்றும் கூறியத் திருத்தந்தை, இந்தக் கொடையை மறக்கும்போது, கடவுள் நமக்கு நெருக்கமாய் இருக்கின்றார் என்ற உணர்வை இழக்கின்றோம் என்றும் தெரிவித்தார். கடவுளின் மீட்பின் கொடையை நாம் மறந்துவிடாமல் இருப்பதற்கு அவரிடம் செபிப்போம் என்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.