2017-10-19 17:04:00

பணத்திற்கு அடிமையாவதிலிருந்து விடுதலைபெற திருத்தந்தை


அக்.19,2017. பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரின் Les Chartreux என்ற கத்தோலிக்கப் பள்ளியின் ஏறத்தாழ எண்பது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், சமத்துவம் மற்றும் நீதியை ஊக்குவித்து, அவற்றைப் பாதுகாப்பவர்களாக தங்களைப் பயிற்றுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிதி உலகில் வேலைவாய்ப்பைப் பெறும் நோக்கத்தில், பெரிய வர்த்தகப் பள்ளிகளில் சேருவதற்காக, இம்மாணவர்கள் தங்களைத் தயாரிப்பது குறித்து மகிழ்வதாகத் தெரிவித்த திருத்தந்தை, பணத்தின் மீது வேட்கை கொள்ளாமலும், பணத்திற்கு அடிமையாகாமலும் இருக்குமாறு கூறினார்.

Les Chartreux பள்ளியில், உறுதியான மனிதாபிமான, மெய்யியல் மற்றும் கலாச்சாரக் கூறுகள் நிறைந்த பயிற்சியைப் பெறுகின்ற இம்மாணவர்கள், இப்போதும், வருங்கால வேலைகளிலும், பணத்தின்மீதான வேட்கையினின்று சுதந்திரமாக வாழுமாறும் கூறியத் திருத்தந்தை, பணம், தன்னை வணங்குவோரைத் தனக்கு அடிமையாக்கிவிடும் என்றும் எச்சரித்தார். 

உலகச் சந்தையின் மறைவான கரங்களுக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படியாமல் இருப்பதற்குச் சக்தியையும், துணிச்சலையும் கொண்டிருக்க வேண்டியது முக்கியம், இதன் வழியாக, சமத்துவத்தில் வளர்ச்சியைப் பாதுகாத்து ஊக்குவிக்க முடியும் என்றும், இவ்வுலகமாகிய நம் பொதுவான இல்லத்தை நீதியுடன் நிர்வாகம் செய்யும் கைவினைஞர்களாக மாற முடியும் என்றும், இம்மாணவர்களிடம் கூறினார், திருத்தந்தை. ஏழை மனிதருக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வொரு அநீதியும், திறந்த காயமாக இருந்து, உங்களின் மாண்பையே குறைக்கும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாமல், இந்த உலகுக்கும், ஒவ்வொரு மனிதருக்கும் பொறுப்புள்ளவர்களாய் மாறுமாறு, ப்ரெஞ்ச் கத்தோலிக்கப் பள்ளி மாணவர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்த்தூசியின் சபை துறவிகள் நடத்தும் இப்பள்ளி மாணவர்கள், தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக உரோம் நகரில் படித்து வருகின்றனர். இதைப் பயன்படுத்தி இவர்கள் திருத்தந்தையை சந்தித்தனர்.

மேலும், திருப்பீடத்திற்கான செர்பிய நாட்டு புதிய தூதர் Dejan Šahović அவர்களிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.