2017-10-19 17:30:00

ரோஹிங்கியா மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட இந்திய ஆயர்


அக்.19,2017. இந்து தீவிரவாத குழுக்களால் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் ரோஹிங்கியா முஸ்லிம் புலம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்புக்கு உறுதி  வழங்குமாறு, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசை, கேட்டுக்கொண்டுள்ளார், இந்திய ஆயர் ஒருவர்.  

புத்த மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்கின்ற மியான்மாரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு எதிராக இடம்பெறும் வன்முறைக்கு அஞ்சி, 2012ம் ஆண்டிலிருந்து ஜம்மு பகுதியில் புகலிடம் தேடியுள்ள அம்மக்கள் எதிர்நோக்கும் மரண அச்சுறுத்தல்களுக்குப் பயந்து, 1200க்கும் மேற்பட்டவர்கள் வெளியேறியுள்ளனர் என்று, ஜம்மு-காஷ்மீர் ஆயர் Ivan Pereira அவர்கள் கூறினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள், Rakhine மாநிலத்தில் இடம்பெறும் வன்முறைக்கு அஞ்சி, கட்டாயமாக வெளியேறியவர்கள் என்றும், 2012ம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள அம்மக்கள், வன்முறை மற்றும் நிச்சயமற்றதன்மையை எதிர்கொண்டவர்கள் என்றும், ஆயர் Pereira அவர்கள் கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ரோஹிங்கியா மக்களின் இருப்பு, உள்ளூரில் வன்முறையைத் தூண்டிவிடும் என்று, சில இந்துமத குழுக்கள் மத்தியில் அச்சம் நிலவுகின்றது என்று கூறப்படுகின்றது. ,

இதற்கிடையே, இந்தியாவில் சட்டத்திற்குப் புறம்பே குடியேறியுள்ள ஏறத்தாழ நாற்பதாயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று, செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UCAN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.