2017-10-20 16:07:00

Caruana Galizia கொலை, திருத்தந்தை இரங்கல்


அக்.20,2017. “உண்மையான மகிழ்ச்சியும், அமைதியும் மிகவும் தேவைப்படும் மனித சமுதாயத்திற்கு கிறிஸ்துவின் அன்பின் சுடரை வழங்குவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில் இவ்வெள்ளியன்று வெளியாயின.

மேலும், மால்ட்டாவில் பிரபல செய்தியாளர் Daphne Caruana Galizia அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து மிகுந்த கவலையடைந்திருப்பதாகவும், இவரின் ஆன்மா நிறைசாந்தி அடையச் செபிப்பதாகவும், இவரின் குடும்பத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிப்பதாகவும், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மால்ட்டா பேராயர் Charles J. Scicluna அவர்களுக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ள தந்திச் செய்தியில், திருத்தந்தையின் செபங்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

இந்த இன்னல்நிறைந்த நேரத்தில், மால்ட்டா மக்கள் அனைவருடனும், திருத்தந்தை ஆன்மீக அளவில் மிக நெருக்கமாய் இருக்கின்றார் மற்றும் மால்ட்டா நாட்டிற்குத் தன் ஆசீரை அளிக்கின்றார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Caruana Galizia அவர்கள், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளை, தனது blogல் குறைகூறி எழுதுபவர் எனச் சொல்லப்படுகிறது. இத்திங்களன்று Mostaவுக்கு அருகில், Bidnija எனுமிடத்தில், Caruana Galizia அவர்களின் வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டு, அது ரிமோட்டால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. 

இதற்கிடையே, தலைநகர் Vallettaல், செய்தியாளர்கள் இக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து மாபெரும் பேரணியை நடத்தியுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.