2017-10-20 15:56:00

உலகிலே இந்தியாவில் மாசுகேடு அதிகம், லான்செட்


அக்.20,2017. உலகில் இடம்பெறும் போர்கள், வன்முறை, எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்றவற்றால் இறப்பவர்களைவிட, சுற்றுச்சூழல் மாசுகேடு, சுத்தமற்ற நீர் போன்ற காரணங்களால் ஒவ்வோர் ஆண்டும் அதிகமான மக்கள் இறக்கின்றனர் என்று, இவ்வியாழனன்று வெளியான ஓர் ஆய்வறிக்கை எச்சரிக்கின்றது.

உலகில், மாசுகேடு மற்றும் நலவாழ்வு பற்றி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ள லான்செட் என்ற மருத்துவ இதழ், 2015ம் ஆண்டில் இடம்பெற்ற இறப்புகளில், ஆறுக்கு ஒன்று, அதாவது ஏறத்தாழ 90 இலட்சம் இறப்புகளுக்கு, நச்சுவாயுவே காரணம் என்று கூறியுள்ளது.  

சுற்றுச்சூழல் மாசுகேடு தொடர்பான இறப்புகள், நோய்கள் மற்றும் நலவாழ்வுப் பிரச்சனைகளால், உலகளாவிய பொருளாதாரத்தில் ஒவ்வோர் ஆண்டும், ஏறத்தாழ 62. விழுக்காடு, அதாவது ஏறத்தாழ 4.6 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாகவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுகேட்டால், ஆசியாவும், ஆப்ரிக்காவும் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்றும், இந்தியாவில் 2015ம் ஆண்டில், காற்று மாசுகேட்டால், 25 இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகளவில், காற்று மாசுகேட்டால் இறப்பவர்கள் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்தில் உள்ளன, சீனாவில் இதனால் 18 லட்சம் பேர் இறந்துள்ளனர் என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : PTI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.