2017-10-20 15:06:00

பாசமுள்ள பார்வையில் : பாட்டியின் பாசமும் தாயின் கண்டிப்பும்


அவ்வப்போது மாமியாருக்கும் மருமகளுக்கும் உரசல் வருவது உண்டு. தன் மகன், மனைவிக்கு சார்பாகப் பேசினாலும், பேரப்பிள்ளைகள் எப்போதும் தன் பக்கமே நிற்பதைக் கண்டு தேவகிக்கு மகிழ்ச்சிதான். அன்றும் தேவகிக்கும் மருமகளுக்கும் சின்னச் சண்டை. பேரப்பிள்ளைகள் இருவரையும் நண்பர்களுடன் வெளியில் கிரிக்கெட் விளையாட அனுப்பாமல், படிக்கச் சொன்னதால், மாமியார் தேவகி, மருமகளிடம் எரிந்து விழுந்தார். அடுத்த வாரம் தேர்வை வைத்துக்கண்டு எப்படி குழந்தைகளை விளையாட அனுமதிக்க முடியும் என்பது மருமகளின் வாதம். என்ன, பெரிய ஐஏஸ் தேர்வா என்பது மாமியாரின் வாதம். மருமகள் சொன்னார், 'அம்மா, என்னுடைய குழந்தைகளைத் தேவையில்லாமல் கஷ்டப்படுத்த மாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் இந்த வீட்டிற்கு மாட்டுப் பெண்ணாக வந்த இந்த 12 ஆண்டுகளில், இந்த படிப்பு விடயம் தவிர, வேறு எதிலும் நான் கண்டிப்பாக இருந்ததில்லை. நான் வேலைக்குப் போனபோதெல்லாம், இந்த இரு குழந்தைகளையும் வளர்த்ததெல்லாம் நீங்கள்தான்.  உங்களால்தான் குழந்தைகள் சிறப்பாக ஊர் மெச்ச வளர்ந்திருக்கிறார்கள். இப்போது உங்களுக்கு வயதாக வயதாக, பேரப்பிள்ளைகள் மீது உள்ள பாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது. நீங்கள் உங்கள் மகனை, அதாவது என் கணவரை, சின்னப் பையனாக வளர்த்தபோது, தேர்வு நேரங்களில் எவ்வளவு கண்டிப்பு காட்டினீர்கள் என எண்ணிப் பாருங்கள், அது போதும். நீங்கள் பாட்டிக்குரிய பாசத்தை இப்போது பொழியும்போது, ஒரு தாய்க்குரிய கடமைகளையும் மதியுங்கள்' என்று.

இவ்வளவு தெளிவான அறிவுடைய மருமகளை ஆண்டவன் கொடுத்ததற்கு இறைவனுக்கு நன்றி கூறினார் அத்தாய்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.