2017-10-20 16:10:00

புனித பூமி கிறிஸ்தவர்கள் கட்டாயமாக புலம்பெயர்கின்றனர்


அக்.20,2017. சிரியா மற்றும் மத்திய கிழக்குப் பகுதியில், பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்களால், கிரேக்க-மெல்கித்தே வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்கள், கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்று, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள் கவலை தெரிவித்தார்.

புனித பூமியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவரான, கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்கள், ஹைஃபாவில், கிரேக்க-மெல்கித்தே வழிபாட்டுமுறை அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.

புனித பூமியில் அப்பாவி கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றி எடுத்துரைத்த கர்தினால் சாந்த்ரி அவர்கள், பெத்லகேமில் தங்க இடமின்றி அலைந்த திருக்குடும்பம் போன்று, இப்பகுதியின் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் புனித பூமியைவிட்டு கட்டாயமாகப் புலம் பெயர்கின்றனர் என்றும், கிறிஸ்தவர்கள், சில நேரங்களில், இயேசுவின் பெயர் காரணமாகவே, கடத்தல், சித்ரவதை மற்றும் மரணத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார்.

கடவுள் இல்லை என்பது போன்று மேற்கத்திய நாடுகளின் வாழ்க்கைத்தரம் அமைந்துள்ளது, ஆனால், கிழக்கில், நான், கிறிஸ்தவன், நான் கத்தோலிக்கன், நான் அர்மேனியன், நான் மெல்கித்தே, நான் கல்தேயன், நான் இலத்தீன் ஆகிய வழிபாட்டுமுறைகளில் உறுதியாய் இருக்கும் நிலையைக் காண முடிகின்றது என்றும் கர்தினால் கூறினார்.

கார்மேல் மலையில் இறைவாக்கினர் எலியா தங்கியிருந்த குகையில் செபம் செய்து, கார்மேல் சபை துறவியரையும் சந்தித்து, திருத்தந்தைக்காவும், திருஅவைக்காகவும், குறிப்பாக, மத்திய கிழக்குப் பகுதிக்காகவும் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர், கர்தினால் சாந்த்ரி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.