2017-10-20 16:02:00

புலம்பெயர்வோரைப் பாதுகாப்பதற்கு திருப்பீடம் அழைப்பு


அக்.20,2017. புகலிடம் தேடும் மக்களுக்கு உதவுவதற்கு, உலகளாவிய சமுதாயம் செயல்திட்டங்களை உருவாக்க வேண்டுமென்று, திருப்பீட அதிகாரி ஒருவர் கேட்டுக்கொண்டார்.

புலம்பெயர்ந்தவர் மீது உலகளாவிய தாக்கம் என்ற தலைப்பில் இவ்வாரத்தில் உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மற்றும், ஏனைய பன்னாட்டு நிறுவனங்களின் திருப்பீட பிரதிநிதி பேராயர் இவான் யூர்க்கோவிச் (Ivan Jurkovič) அவர்கள், இவ்வாறு கூறினார்.

“புலம்பெயர்வோரை ஏற்கும் நாடுகள், பன்னாட்டுப் பாதுகாப்பு தேவைப்படும் மனிதர்களை, எவ்வாறு கண்டுகொள்வது?” என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், யாருடைய துணையுமின்றி புலம்பெயரும் சிறாரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் சுட்டிக் காட்டினார்.

புலம்பெயர்வோரை வரவேற்கும் நாடுகளுக்கு, குறிப்பாக, வளரும் நாடுகளுக்கு, தகுந்த நேரத்தில் தக்க உதவிகள் வழங்கப்படுவதில் கவனம் செலுத்துமாறும் உலகளாவிய சமுதாயத்தை, பேராயர் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.