2017-10-20 15:49:00

மனிதர், சுற்றுச்சூழலுக்கு உகந்த நன்னெறிக்கு திருத்தந்தை..


அக்.20,2017. செயல்திறனின் பீடத்தில் பலியிடப்படாத அடிப்படை விழுமியங்களைக் கொண்டதும், மனிதருக்கும், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததுமான நன்னெறிகள் காக்கப்படுமாறு, அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இலத்தீன் அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் நிறுவனத்தின் (ODUCAL) ஒத்துழைப்புடன், திருப்பீட சமூக அறிவியல் கழகம் வத்திக்கானில் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புறக்கணிப்பு, சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுதல் ஆகிய இரண்டுக்கும் உரிய காரணங்களை விளக்க விரும்புவதாகத் தெரிவித்தார்.

இப்பூமிக் கோளத்தில் அதிகரித்துவரும் சமத்துவமற்றதன்மை மற்றும் சுரண்டல்கள், வருவாய் மற்றும் செல்வங்களைவிட அதிகமாக உள்ளன, அதேநேரம்  சமத்துவமற்றதன்மையும் சுரண்டலும், அகற்ற முடியாதவை அல்ல, ஏனென்றால், பலதரப்பட்ட தனிப்பட்ட குழுக்களையும் விடுத்து, இவை, ஒரு சமுதாயம் கொடுக்க விரும்பும் பொருளாதார விதிமுறைகளைச் சார்ந்து உள்ளன என்றும், திருத்தந்தை உரையாற்றினார்.

புறக்கணிப்புக்கு மற்றுமொரு காரணம், மனிதருக்குக் கிடைக்கும் தகுதியற்ற வேலை என்றும், வேலையாட்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும், அதோடு, உற்பத்தி பொருள்கள் அனைத்தும் மனிதரின் மற்றும் அவர்களின் வாழ்வைப் பூர்த்தி செய்வதாய் இருக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அரசியல் நடவடிக்கைகள், மனிதர், பொதுநலன், இயற்கையை மதித்தல் ஆகியவற்றுக்குப் பணியாற்றுவதாய் இருக்குமாறு வலியுறுத்திய திருத்தந்தை, சந்தை, செல்வத்தை உருவாக்கி, நீடித்த வளர்ச்சிக்கு உதவுதாயும் இருப்பதோடு, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்றும், நம் பொதுவான இல்லமாகிய பூமியைப் பாதுகாப்பதற்கும் இக்காலத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

“சந்தை, நாடு மற்றும் குடிமக்கள் சமுதாயம் மத்தியில் மாறிவரும் உறவுகள்” என்ற தலைப்பில், அக்டோபர் 19, இவ்வியாழனன்று தொடங்கிய இக்கூட்டம், அக்டோபர் 21, இச்சனிக்கிழமையன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.