2017-10-21 16:20:00

ஏமனில் 45 இலட்சம் சிறாரின் கல்வி ஆபத்தில்


அக்.21,2017. ஏமன் நாட்டில் மூன்றாவது ஆண்டாக நடைபெற்றுவரும் சண்டையால், குறைந்தது 45 இலட்சம் சிறாரின் கல்வி வாய்ப்பு ஆபத்தில் உள்ளது என்று, ஐ.நா.வின் அவசரகால குழந்தைநல நிதி நிறுவனமான யுனிசெப் கூறியது.

யுனிசெப் நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்கப் பகுதி இயக்குனர் Geert Cappelaere அவர்கள் கூறுகையில், ஏமனில் ஏறத்தாழ 1,600 பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன அல்லது சேதமாக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 170 பள்ளிகள் இராணுவத்திற்காக அல்லது புலம்பெயர்ந்த மக்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

ஏமனில், பத்து பள்ளிகளில் ஒன்று வீதம் மூடப்பட்டுள்ளன என்றும், ஏறத்தாழ நான்கில் மூன்று பகுதி ஆசிரியர்களுக்கு, ஓராண்டளவாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், சிறார் கல்வி கற்க இயலாததால், படைகளுக்கும், சிறார் திருமணங்களுக்கும் உள்ளாகும் ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார் Cappelaere.

பள்ளிக்குச் செல்லும் சிறாரும் மரங்களுக்கு அடியில் அல்லது குடிசைகளில் கற்க வேண்டியிருப்பதால், கல்வியும் எளிதாக இல்லை என்றும் கூறினார், யுனிசெப் அதிகாரி Cappelaere.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.