2017-10-21 16:27:00

சிரியா, பாலஸ்தீனிய புலம்பெயர்ந்தவர்களுக்கு மனிதாபிமானம்.....


அக்.21,2017. லெபனான் நாட்டிலுள்ள சிரியா மற்றும் பாலஸ்தீனியப் புலம்பெயர்ந்த மக்கள், லெபனானுக்குப் பெரும் சுமையாய் உள்ளனர் என்றும், அவர்கள் விரைவில் அவரவர் இல்லம் திரும்ப வேண்டுமென்றும், லெபனான் மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை Beshara al-Rahi அவர்கள் கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெட்டிராய்ட் மாநிலத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ள, முதுபெரும் தந்தை al-Rahi அவர்கள், சிரியா மற்றும் பாலஸ்தீனியப் புலம்பெயர்ந்த மக்களின் நிலை குறித்து விளக்குகையில் இவ்வாறு கூறினார்.

புலம்பெயர்ந்துள்ள இம்மக்கள், லெபனான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் உள்ளனர் என்றும், அதேநேரம், லெபனான் நாடு, இம்மக்களிடம் மனிதாபிமான ஒருமைப்பாடு காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள இவர்கள், மக்கள்தொகை, பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்றும், அராபியச் சூழலில் லெபனான் தன் பணியை ஆற்ற வேண்டியுள்ளதால், இம்மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப வேண்டுமென்றும் கூறினார், முதுபெரும் தந்தை al-Rahi.

லெபனான் நாட்டில், சிரியாவிலிருந்து  புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் 15 இலட்சத்துக்கு மேல் உள்ளனர். மேலும், பாலஸ்தீனாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் லெபனானில் உள்ளனர்.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.