2017-10-21 14:39:00

பொதுக்காலம் 29ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை


அக்.21,2017. அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கொடுக்கப்பட்டால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறிவிடும் என்பது உறுதி. ஆனால், அவரவருக்கு உரியது, அவரவருக்குக் கிடைக்காமல் இருப்பதால்தான், உலகம், சிறிது சிறிதாக, நரகமாக மாறி வருகிறதோ, என்று எண்ணத் தோன்றுகிறது.

“சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்ற புகழ்பெற்ற வரிகளை, இன்றைய நற்செய்தியின் இறுதியில் சொல்கிறார் இயேசு. விவிலியம், கிறிஸ்தவம் என்ற எல்லைகளைத் தாண்டி, பொருளாதாரம், அரசியல் என்ற பலச் சூழல்களில் மேற்கோளாகப் பயன்படுத்தப்படும் ஒரு புகழ்பெற்ற வாக்கியம் இது. இயேசு கூறிய இப்புகழ் மிக்கக் கூற்றையும், அவர் ஏன் அவ்வாறு சொன்னார் என்பதையும், இந்த ஞாயிறு சிந்தித்து, பயன் பெறுவோம்.

சீசருக்கும், கடவுளுக்கும், பொதுவாக யாருக்குமே அவரவருக்கு உரியதைக் கொடுங்கள் என்று இயேசு எப்போதும் சொல்லி வந்தார். இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் யார்? மதத்தையும் கடவுளையும் தங்கள் தனிச் சொத்தாகப் பாவித்து, மக்களுக்கு உரிய கடவுளை அவர்களுக்குக் கொடுக்க மறுத்த பரிசேயர்களும், மதத் தலைவர்களும் இயேசு சொன்ன இந்த உண்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள். கடவுளுக்கு உரியதை கடவுளுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்த, இயேசு அவர்களிடம் பல உவமைகளைக் கூறினார். இந்த  உவமைகள் வழியே, இயேசு உணர்த்த விரும்பிய உண்மைகளை, பரிசேயர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் எண்ணம், கவனம் எல்லாம், இயேசுவுக்கு உரிய மரியாதையை அவருக்கு வழங்கக்கூடாது என்பதில் மட்டுமே இருந்தது.

மத்தேயு நற்செய்தி 22ம் பிரிவிலிருந்து நமக்கு வழங்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், எளிய ஒரு நிகழ்ச்சியைப் போல் தெரிகிறது. ஆனால், இந்நிகழ்வின் பின்னணியில் புதைந்திருக்கும் அடுக்கடுக்கான பல அம்சங்களை அலசினால், பல உண்மைகளை, பல பாடங்களை, நாம் பயில முடியும். முயல்வோம் வாருங்கள்.

கடந்த மூன்று வாரங்களாய் இயேசு கூறிய உவமைகள் வழியே, கசப்பான பல பாடங்கள் பரிசேயர்களுக்கு வழங்கப்பட்டன. அந்த உண்மைகளை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, பரிசேயர்கள், இயேசுவை எப்படியாவது வென்றுவிடும் வெறியில், மற்றொரு குழுவினரையும் தங்களுடன் சேர்த்துக் கொள்கின்றனர். அவர்கள்தாம் ஏரோதியர்கள்.

பரிசேயர்களும், ஏரோதியர்களும் கொள்கை அளவில் எதிரிகள். யூத குலத்தில், கடவுளுக்கு மிகவும் பிரமாணிக்கமாய் இருப்பவர்கள் தாங்கள் மட்டுமே என்று எண்ணி வந்தவர்கள் பரிசேயர்கள். எனவே, கடவுளின் அதிகாரத்திற்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்த உரோமைய ஆட்சியையும், பேரரசரான சீசரையும் முற்றிலும் வெறுத்தவர்கள் பரிசேயர்கள்.

ஏரோதியர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்டவர்கள். யூத சமுதாயத்தின் பச்சோந்திகள் என்று அழைக்கப்பட்ட இவர்கள், சீசருக்குச் சாமரம் வீசிய ஏரோதுடன் இணைந்து, உரோமைய அரசுக்குச் சாதகமாகப்  பணிகள் செய்தனர். கொள்கை அளவில், இரு வேறு துருவங்களாக, பகைவர்களாக இருந்த பரிசேயர்களும், ஏரோதியரும் சேர்ந்துவிட்டனர். காரணம்? இவர்கள் இருவருக்கும் ஒரு பொதுவான எதிரி இருந்தார். அவர்தான் இயேசு.

அரசியல் உலகில் நண்பர்கள், எதிரிகள் என்பவர்கள், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் மாறுபவர்கள் என்பதை, நாம், இந்தியாவிலும், இன்னும் பிற நாடுகளிலும், பார்த்து வருகிறோம். பாம்பும், கீரியும் போல, ஒருவரையொருவர் அழிக்க ஆசைப்படும் அரசியல்வாதிகள், கரங்கள் கோர்த்து மேடைகளில் தோன்றுவதைப் பார்த்து, நாம் பல முறை வேதனையில் சிரித்திருக்கிறோம். இப்படி ஒரு காட்சியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது, இன்றைய நற்செய்தியின் முதல் வரிகள். ஏரோதியர்கள் முழுமையான அரசியல்வாதிகள். பரிசேயர்கள் தங்களை மதத்தலைவர்கள் என்று கருதுபவர்கள். அரசியலும், மதமும் இணைந்து இயேசுவை ஒழிக்க திட்டமிடுகின்றன.

அதிகாரத்தை, சுயநலத்தை காத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் எழும்போது, கொள்கைகளை மூட்டைகட்டி வைத்துவிடும் அரசியல் பச்சோந்திகளைப் போல், நாமும் வாழ்வில் அவ்வப்போது நிறம் மாறுகிறோமா என்ற கேள்வியை இன்று எழுப்புவது அவசியம். ஒரு குறிப்பிட்ட ஆதாயத்திற்காக நம் உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுத்த நேரங்கள், அல்லது உண்மையை மறுத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? குறிப்பிட்ட ஒருவரைப் பழிவாங்குவதற்காக, அல்லது அவரை வெல்வதற்காக நம் மனசாட்சியை அடமானம் வைத்த நேரங்கள் எத்தனை, எத்தனை? இக்கேள்விகளுக்கு உண்மையான விடைகள் தேடினால், நம் வாழ்விலும் அரசியல் எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது என்பது தெளிவாகும்.

கொள்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, கூட்டணி சேர்ந்து வரும் பரிசேயர்கள் மற்றும் ஏரோதியர்களுடன் இயேசு மேற்கொண்ட உரையாடல், நமக்கு அடுத்த பாடம். நேர்மையுடன் செயல்பட முடியாத பரிசேயர்களும் ஏரோதியர்களும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் போலி வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு நேரடியாகவே பேசினார். பணிவு என்ற ஆட்டுத் தோலைப் போர்த்தி, இயேசுவை வேட்டையாட வந்திருந்த அந்த ஓநாய்களின் வெளிவேடத்தை கலைத்து, இயேசு நேரடியாகவே பேசினார்:

மத்தேயு நற்செய்தி 22: 18-21

இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார். அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.

வரி செலுத்த பயன்படுத்தப்பட்ட 'தெனாரியம்' என்ற நாணயம், அந்த நாணயத்தைப் பார்த்தபின் இயேசு சொன்ன அந்தப் புகழ்மிக்க வார்த்தைகள் ஆகியவை, நமது மூன்றாம் சிந்தனை. 'தெனாரியம்' என்ற அந்த நாணயத்தின் ஒரு புறம், உரோமையப் பேரரசன் சீசரின் உருவமும், "தெய்வீக அகுஸ்து சீசரின் மகன் திபேரியு சீசர்" என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. நாணயத்தின் மறுபக்கம் 'Pontifex Maximus' அதாவது ‘குருக்களுக்கெல்லாம் பெருங்குரு’ என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு சீசர், தன்னை, வெறும் அரசியல் தலைவனாக மட்டுமல்லாமல், மதத்தலைவனாகவும், கடவுளாகவும் காட்டுவதற்கு, அந்த நாணயங்களை உருவாக்கியிருந்தார்.

சீசருக்கு வரி கொடுப்பதா வேண்டாமா என்று கேட்டவர்களிடம், ‘சீசரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்த நாணயங்களை சீசருக்குக் கொடுங்கள்’ என்று சொன்ன இயேசு, அத்துடன் தன் பதிலை நிறுத்தியிருக்கலாம். ஆனால், இந்த வார்த்தைகளைச் சொன்ன அதே மூச்சில், இயேசு, “சீசருக்கு உரியவற்றை சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்றார். சீசரையும், கடவுளையும் இணைத்து இயேசு பேசியது அரசியலையும் மதத்தையும் இணைத்து சிந்திக்க நமக்கொரு வாய்ப்பைத் தந்துள்ளது.

மனித வரலாற்றில் மதமும் அரசியலும் மோதிக்கொண்ட காலங்களும், கைகோர்த்து நடந்த காலங்களும் உண்டு. மதநிறுவனங்களில் அரசியல் புகுந்துள்ளதையும், அரசியலுக்கு, மதச்சாயங்கள் பூசப்படுவதையும், நாம், அதிக அளவில் கண்டு வருகிறோம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்று தங்களை மேடைகளில் பறைசாற்றும் அரசியல் தலைவர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மதத் தலைவர்களைச் சந்திப்பது, மத வழிபாடுகளில் ஈடுபடுவது என்று தங்கள் நிறத்தை மாற்றுவதைக் காண்கிறோம்.

அரசியல் தலைவர்களும், அரசியல்வாதிகளும் இறைவனின் துணையை, ஆசீரை நாடிச் செல்வதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், இறைவனையும், இறைவனின் அடையாளங்கள், திருத்தலங்கள் ஆகியவற்றையும் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியல்வாதிகள், ஆண்டவனின் சன்னதியில் பணிவோடு நுழைகின்றனர். பிறகு, அந்த ஆண்டவனைப் பீடங்களில் இருந்து இறக்கி வைத்துவிட்டு, தங்களையே பீடங்களில் ஏற்றிக் கொள்கின்றனர். தன்னையே கடவுளாக்கிக் கொண்ட சீசரின் காலம் முதல், அரசியல்வாதிகளைப் பீடித்துள்ள இந்த வியாதி இன்னும் நீங்கவில்லை.

இவ்விதம் அரசியலுக்கு மதச்சாயம் பூசப்படுவது ஒருபக்கம் என்றால், மதங்களில், மதநிறுவனங்களில் அரசியல் கலந்திருப்பது மறுபக்கம்.  மதத்தில் அரசியலைக் கலந்த பரிசேயர்களும், யூத மதத்தலைவர்களும் தங்கள் அதிகாரத்திற்குச் சவாலாக வந்த உரோமைய அரசையாகிலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தனர். ஆனால், எங்கிருந்தோ வந்த இயேசுவைத் தங்கள் பரம எதிரியாகக் கருதினர். அவரைப் பழிதீர்க்கும் வெறியில் இருந்தனர். இயேசுவை ஒழித்து விட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அரசியல்வாதிகளின் நாடகங்களையும் விஞ்சின. இதற்காக, ஏரோதியர்கள் போன்ற தங்கள் எதிரிகளுடனும் சமரசம் செய்துகொண்டனர்.

மதமும் அரசியலும் கலந்த இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது. இந்தச் சூழலில், நமக்கு இன்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் மிகவும் தெளிவாக ஒலிக்கின்றன. சீசரின் உருவம் பதித்த நாணயத்தை சீசருக்குத் தருவது போல், கடவுளின் உருவம் பதிந்துள்ள நம்மை (தொடக்க நூல் 1:26) கடவுளுக்கு வழங்க வேண்டும் என்று இயேசு கூறுகிறார். சீசருக்குரியதை, இந்த உலகிற்குரியதை நாம் வழங்கித்தான் ஆக வேண்டும். ஆனால், அத்துடன் நம் வாழ்வு, கடமை எல்லாம் முடிந்து விடுவதில்லை. சீசரையும், இவ்வுலகையும் தாண்டிய இறைவன் இருக்கிறார், அவருக்கு உரியதையும் நாம் வழங்க வேண்டும் என்று இயேசு நம்மிடம் இன்று கேட்கிறார். நம் பதில் என்ன?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.