2017-10-21 15:37:00

மாற்றுத்திறனாளிகள், வேதியர்களாக மாற காலம் கனிந்துள்ளது


அக்.21,2017. மாற்றுத்திறனாளிகள், மறைக்கல்வி ஆசிரியர்களாக மாறுவதற்கும், அவர்கள் தங்களின் சான்று வாழ்வு வழியாக, கிறிஸ்தவ விசுவாசத்தை மிகவும் சாரமுடன் எடுத்துரைப்பதற்கும் திருஅவை உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

“மாற்றுத்திறனாளிகளும், மறைக்கல்வியும் : திருஅவையின் மேய்ப்புப்பணியில் ஈடுபடுத்துவதன் அவசியம்” என்ற தலைப்பில் புதியவழி நற்செய்தி அறிவிப்பு அவை நடத்துகின்ற பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் ஏறத்தாழ 450 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகளின் திறமைகள் கண்டறியப்பட்டு, அவர்கள் மேய்ப்புப்பணிகளில் இணைக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்.

மாற்றுத்திறன் கொண்டவர்களைப் பலவீனங்களோடு ஏற்று, அவர்களின் மாண்பை மதிப்பதிலும், அவர்களை நல்ல முறையில் நடத்துவதிலும் கடந்த பத்து ஆண்டுகளில் பெருமளவு முன்னேற்றம் காணப்படுகின்றபோதிலும், அவர்கள் வழங்க முன்வரும், பன்முக, மனித மற்றும் ஆன்மீக வளமையை ஏற்கத் தவறும், சர்வாதிகாரப் போக்கும் காணப்படுவது கவலையளிக்கின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மாற்றுத்திறன் கொண்டவர்கள் மீது, போலியான மற்றும் ஏமாற்று இல்லாத உண்மையான அன்பு காட்டப்பட வேண்டும் என்றும், இம்மக்களைப் பாதுகாத்து ஊக்குவிப்பதில், திருஅவை குரலற்று இருக்க இயலாது என்றும், ஞாயிறு வழிபாடுகளில் அவர்கள் இணைக்கப்பட வேண்டுமென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தினார். எந்தவிதக் குறைகள் உள்ளவர்களும், தங்களின் விசுவாசப் பயணத்தில் இயேசுவைச் சந்திப்பதற்கும், அவர்கள் விசுவாசத்தை இழந்துவிடாமல் இருப்பதற்கும், மறைக்கல்வி உதவ வேண்டுமென்றும் திருத்தந்தை அழைப்பு விடுத்தார்.

அக்டோபர் 20, இவ்வெள்ளியன்று தொடங்கிய இந்த மூன்று நாள் உலக கருத்தரங்கில், 450 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.