2017-10-23 16:51:00

அக்டோபர் 2019 சிறப்பு தூதுரைப்பணி மாதம்


அக்.23,2017. 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம், அகில உலகத் திருஅவையில், சிறப்பு தூதுரைப்பணி மாதமாகச் சிறப்பிக்கப்படும் என்றும், உலகில் திருஅவையின் தூதுரைப் பணியை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடம் சிறப்பாக அர்ப்பணிப்பதாகவும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ விசுவாசத்தின் இதயம் தூதுரைப்பணி என்ற தலைப்பில், அக்டோபர் 22, இஞ்ஞாயிறன்று உலக மறைபரப்பு தினம் சிறப்பிக்கப்பட்டது என்றும், ஒவ்வொருவரும் தங்களின் அன்றாட செயல்கள் மற்றும் வாழ்வு வழியாக, நற்செய்திக்குச் சான்று பகர்ந்து, தூதுரைப்பணியின் மகிழ்வில் வாழுமாறு வலியுறுத்தினார் திருத்தந்தை.

அதேநேரம், கிறிஸ்துவை இன்னும் அறியாதவர்களுக்கு ஆற்றப்படும் நற்செய்திப் பணிக்கு, தெளிவான உதவிகள் மற்றும் செயல்களால் ஆதரவளிக்குமாறும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மேலும், முதல் உலகப் போருக்குப் பின், கத்தோலிக்கத் தூதுரைப் பணிகள் பற்றி, “திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், 1919ம் ஆண்டில் வெளியிட்ட Maximum Illud” என்ற திருமடலின் நூறாம் ஆண்டை முன்னிட்டு கடிதம் ஒன்றை, இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர் கர்தினால் ஃபெர்னான்டோ பிலோனி அவர்களுக்கு இக்கடிதத்தை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகெங்கும் மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.